Translate Tamil to any languages.

Saturday, 16 December 2017

வலைவழி வாசிப்புப் போட்டி வெற்றி தருமா?

உறவுகளே! நான் உங்கள் யாழ்பாவாணன்!

2010 இலிருந்து எனது எண்ணங்களை வலைவழியே பகிர்ந்து வருகின்றேன்.
சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. அதனை மேம்படுத்த வலைவழியே 'வாசிப்புப் போட்டி 2016' நடாத்தி ஓரளவு வெற்றி பெற்றேன்.

ஆயினும், 10/10/2017 அன்று 'வாசிப்புப் போட்டி 2017' இற்கான அறிவிப்பை (இணைப்பு: https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html) எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதற்கான தேர்வு நாளை 17/12/2017 ஞாயிறு அன்று இடம் பெறுகிறது. இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்துப் பங்குபற்றலாமே!

மேற்படி வாசிப்புப் போட்டி நடாத்துவதால் சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு மலருமா? தங்கள் ஆய்வினைப் பகிருங்கள்.

நன்றியுடன் உங்கள் யாழ்பாவாணன்.

Tuesday, 12 December 2017

முதலாவது நேர்காணலில் முகம் காட்டுகின்றேன்.

கவிதையென்றால் பாரதியார் நினைவில் வரவேண்டும்.
பாரதி பிறந்த நாளில் (11/12/1882) எனக்கொரு செய்தி கிட்டியதே! அதனைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

இலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சியில் 05/10/2017 அன்றும் 06/10/2017 அன்றும் ஒளிபரப்பாகிய 'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் மூத்த கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுடன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் அவர்களும் பங்குபற்றி இருந்தார். இருவரையும் கவிஞர் முகுந்தன் அவர்கள் நேர்காணல் மேற்கொண்டார்.

இலக்கிய உலகில் 1987 இல் நுழைந்தாலும் எனது "உலகமே ஒருகணம் சிலிர்த்தது" என்ற தொடக்க வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்தாலும் என் வாழ்வில் முதலாவது நேர்காணல் இதுவென்பேன். என்னை முதலில் நேர்காணல் செய்த கவிஞர் முகுந்தன் அவர்களை எனது வலையுறவுகள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என நம்புகின்றேன்.

'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைத்துச் சிறப்பித்தமைக்கு இலங்கை, யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சி மேலாண்மைக்கும் கவிஞர் முகுந்தன் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

05/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு

முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490166971367649/

06/10/2017 அன்று ஒளிபரப்பாகிய பதிவு

முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490167281367618/

இந்த நேர்காணலைப் பார்வையிட்ட பின்னர் - தங்கள்
சொந்த எண்ணங்களை வெளியிட்டு உதவுங்கள் - அவை
நாளைய எனது நகர்வுக்கு வழிகாட்டுமே!

Thursday, 7 December 2017

வணக்கமும் நன்றியும் தேவையா?


“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே” என்ற
நன்னூல் நூற்பா(462) வழியே
தமிழர் பண்பாட்டைப் பேணும் நோக்கில்
நல்லவற்றை ஏற்பதில் தவறில்லையே!
ஆங்கில மொழிப் பேச்சு வழக்கான
Welcome - 'வணக்கம்' எனவும்
Hand Shake - 'கை குலுக்கல்' எனவும்
Thanks - 'நன்றி' எனவும்
Bye - 'போயிட்டு வாறேன்' எனவும்
தமிழர் செயல்களில் வரினும் - அவை
நன்னெறி காட்டிப் பாவிப்பதைப் பாரும்!
நிகழ்வாயினும் சரி
அரங்கப் (மேடைப்) பேச்சாயினும் சரி
"வணக்கம்" என்று தொடங்கி
"நன்றி" என்று முடிக்கிற
பண்பாட்டை வழக்கப்படுத்தியாச்சு!
ஆளை ஆள் சந்திக்கையில்
"வணக்கம்" என்று கைகுலுக்கி
உறவை உருவாக்கி/ புதுபித்து - பின்
"நன்றி" என்று கைகூப்பி
மலர்ந்த/ பழகிய உறவைப் பேணி
'போயிட்டு வாறேன்' என விடைபெறுவதும்
தமிழர் உறவு முறையில் பழகியாச்சு!
நன்னெறி காட்டி
பழக்கப்படுத்தியதையும்
வழக்கப்படுத்தியதையும்
மாற்றிக்கொள்ள முயன்றால் - விளைவாக
நல்ல தமிழ்ப் பண்பாடு சீரழியுமே!
எப்படி இருப்பினும்
'வணக்கம்' என்கிற 'Welcome' உம்
'நன்றி' என்கிற 'Thanks' உம்
தமிழில் தேவையே இல்லை!
பிறமொழிச் சொல் பயன்பாட்டை
தமிழில் இருந்து அகற்றாத வரை
தமிழ்ப் பண்பாடு தான்
உலகில் சிறந்தது என்று முழங்கி
பயன் ஏதாச்சும் கிட்டுமா?
பயன் கிட்டப் பக்குவமாக
பிறமொழிச் சொல் நீக்கி
நற்றமிழ் சொல் பொறுக்கி - அழகுற
எழுத்திலும் பேச்சிலும் வாழ்விலும்
பழக்கப்படுத்தி, வழக்கப்படுத்திப் புழங்க வேண்டுமே!

"ஆரியப் பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது." எனத் தமிழகத் தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் தெரிவித்ததாக 'எனது எண்ணங்கள்' வலைப்பூவில் அறிஞர் தி.தமிழ் இளங்கோ பகிர்ந்திருந்தார். அப்பதிவுக்குக் கருத்துரைத்த அறிஞர் ஜீவி அவர்கள் "நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில் இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருந்தார்.
https://tthamizhelango.blogspot.com/2017/12/blog-post.html


இக்கருத்துகள் என்னைச் சித்திக்கவைத்தது. அதனால், என்னுள் எழுந்த எண்ணங்களை எனது வழமையான கிறுக்கலில் உங்களுடன் பகிருகின்றேன்.