Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Friday, 18 October 2013

சுகமாகப் பா (கவிதை) புனைய

இலக்கியம் தோன்றிய பின் இலக்கணம் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் இலக்கியம் படைக்க இலக்கணம் தேவையற்ற ஒன்று என எண்ணிவிட முடியாது. அதாவது, எந்தவொரு இலக்கியத்தைப் படைக்க முயன்றாலும் அதன் வடிவம் குறித்தவொரு இலக்கணத்தை ஒட்டியே காணப்படுகிறது. தமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.

இலக்கண வரையறை அல்லது சொல்லாட்சி (தூய தமிழ் சொல், அசைசீரால் அமைந்த சொல், தனியசையாலோ தனியெழுத்தாலோ ஆன சொல்) அல்லது குறியீட்டுப் பாவனை என ஏதாச்சும் நம்மாளுகள் தெரிந்து வைத்துப் பாபுனையலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டு தரப்புக் கவிதைகளை வாசித்து மகிழ (இரசிக்க) ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல. எல்லாவற்றுக்கும் பாட்டு இலக்கணம் தான் காரணம். வாசகரும் வாசித்து மகிழ (இரசிக்க) பாட்டு இலக்கணம் சற்றுத் தெரிந்திருந்தால் நன்மை தருமே!

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!

எடுத்துக்காட்டாக மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். மரபுக்கவிதை என்றால் இலக்கணம் வேண்டுமென என எண்ணி, இலக்கணம் ஏதுமில்லாத புதுக்கவிதையை எவரும் எழுதிவிடலாமென எழுத முன்வரக்கூடாது. புதுக்கவிதைக்கும் இலக்கணம் உண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.

எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம்  இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன். அதாவது அசை, சீர், அலகிடுதல், அடி, தொடை, பாவினம் போன்ற அறிவு தெரிந்திருந்தால் நன்று.

இதனடிப்படையிலேயே யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்ற தொடரை எழுதி வருகின்றேன். மேலும் "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் இவ்வலைப்பூப் பட்டி(Menu)யில் அடிப்படை இலக்கணத் தெளிவைத் தரக்கூடிய நூலொன்றை இணைத்துள்ளேன். (படிக்க: http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html) அதேவேளை விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் நூலைப் பகுதி பகுதியாகப் பதிவு(Posting) செய்கிறேன். இதேநோக்கில் இன்னும் பல அறிஞர்களின் நூலை இவ்வலைப்பூவில் இணைக்க எண்ணியுள்ளேன்.

எனது மின்நூல் களஞ்சியத்திலும் சுகமாகப் பா (கவிதை) புனைய "பாட்டு இலக்கணம்" என்ற பகுதியில் (Folder இல்) பல நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இவ்விணைப்பைச் http://wp.me/PTOfc-58 சொடுக்கி "தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்." என்ற இணைப்பைச் சொடுக்கி அத்தனை நூல்களையும் பதிவிறக்கிப் படிக்கலாமே.

முடிவாகச் சொல்வதாயின் இன்றைய வாசகருக்காக படைப்பாளிகள் இலக்கணமின்றிய இலக்கியங்களை ஆக்கினாலோ அதனை வாசகர் ஏற்றுக்கொண்டாலோ தமிழ் அழிவது உறுதி. எனவே படைப்பாளிகள் இலக்கண வரையறையைக் கடைப்பிடித்தே இலக்கியம் எழுத வேண்டும். வாசகரும் அடிப்படை இலக்கண வரையறைகளைத் தெரிந்துகொண்டு நல்ல, இறுக்கமான, தரமான இலக்கியங்கள் மலரப் படைப்பாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே தமிழை அழியாது பேணமுடியும்.

புதிதாகப் பாபுனைய விரும்பும் எல்லோரும் சுகமாகப் பா (கவிதை) புனையத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் படைப்புகள் இலக்கண வரையறையுடன் உயர்தரமாக இருப்பின் பேரறிஞர்களின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புண்டு. எளிமையாக இருப்பின் வாசகர் எண்ணிக்கை பெருகுமென நம்பினால்; அவ்வாறாக எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் மறைந்துவிடும் அல்லது மக்கள் மத்தியில் நிலைத்திருக்காது என்பதை மறக்கவேண்டாம்.

காலும் கழிந்தால் முழுமையாக...

நாற்சந்தியில் சிலர் கூடி வாய்காட்டுவது வழக்கம். அப்படிச் சிலர் நடித்த நாடகம் இது.


ஒரு மாலைப் பொழுது... ஒன்று சேர்ந்த நண்பர்கள் நாற்சந்தியால போன அரைகுறை ஆடை அணிந்த குமரியைக் கண்டிட்டாங்க... உடனே நண்பர்கள் வாய்காட்ட வெளிக்கிட்டிட்டாங்க...

முதலாமாள்: ஆள் பாதி ஆடை பாதி என்றால் என்னங்க...

இரண்டாமாள்: விளம்பர நடிகைகள் கால் பங்கு
ஆடையோட முக்கால் பங்கு உடலைக் காட்டுறாங்களே...

மூன்றாமாள்: காலும் கழிந்தால் முழுமையாகத்
தெரியும். ஆனால், அதுகளைப் பார்க்காதீங்க...

முதலாமாள்:
அட முழு முட்டாளுகளே!
அறிவைப் பாவிப்பது அரைப் பங்கடா...
மிடுக்கான ஆடை அணிவது அரைப் பங்கடா...
அப்ப தானடா,
அரையும் அரையும் முழுமையடா!

இரண்டாமாள்: உது நேர் முகத் தேர்வுக்குத் தானடா...

மூன்றாமாள்: வாழ்க்கையிலும் பாவித்துப் பாரேன், உலகம் உன் காலடியில் வீழும்!

ஈற்றில் சரி! சரி! இருள் இறங்கிற நேரம் வந்தாச்சு... என எல்லோரும் வீட்டுக்குப் புறப்படலாமெனக் கலைந்து சென்றனர். 

பள்ளிக்கு வெட்டியதால் தொழிலுக்கு அலைகின்றேன்...


பள்ளிக்குப் போனால் படிப்பெல்லோ
பள்ளிக்கு ஒளித்தால்
செய்தி என்னவாயிருக்கும்?
பிள்ளைகளைக் கேட்டால்
பெற்றவர்களுக்கு
உண்மை சொல்லுங்களோ?
படிப்புக் கொஞ்சம் புளிக்கலாம்...
ஆசிரியர் அடிக்கலாமென அஞ்சலாம்...
கெட்ட நட்புடன் சுற்றலாம்...
காதல் நோயால் அலையலாம்...
உண்மையில்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்...
பதின்ம அகவை
அப்படி, இப்படி இழுக்கலாம்...
தேர்வெழுத அஞ்சி
நானும் சி்ன்ன அகவையில்
பள்ளிக்குப் போவதை வெட்டியதால்
இன்றைக்கு - நானும்
தொழில் தேடி அலைகின்றேன்...
பள்ளிக்கு ஒளித்து
தேர்வுப் புள்ளியில் முட்டை
வாங்க விரும்புவோரே
என் நிலைமை உங்களுக்கும் வர வேண்டாம்!
என்றாலும்
"கற்றோர்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு" என்பதை
உங்கள் காதுகளில் போட்டுடைக்கின்றேன்!

உண்மையை உணர்ந்து

சித்திரையாள் வருகின்றாள்...
இத்தரையில் நல்லன கிடைக்குமா?
வேற்றுமையை விரட்டியே
ஒற்றுமையை வழங்குவாளா?
சமனிலையைப் பேணி
அமைதியைப் பேண உதவுவாளா?
இதற்கெல்லாம்
சித்திரையாள் பணியமாட்டாள்
இவற்றையெல்லாம்
தரைவாழ் மக்களே
தாங்களாகவே செய்யட்டுமென
வானிலிருந்து கையைவிரிப்பாளா?
எதற்கும் நாமே
சித்திரைப் புத்தாண்டிலிருந்தே
உண்மையை உணர்ந்து
நல்லனவெல்லாம் செய்வோம்!

சாவுக்குப் போர் வேண்டாம்!

நல்ல தமிழைப் பேணி
தமிழர் வாழ வேண்டும்...
நல்லபடி தமிழர் வாழ்ந்தால்
உலகின் நாலா பக்கமும்
ஏன் எட்டுத் திக்குமே
நற்றமிழ் பேண இடமுண்டு...
இப்படி எத்தனையோ
எண்ணங்களைச் சுமந்து போராடும்
தோழர்களே! தோழிகளே!
தமிழர் சாவடைந்த பின்னர்
தமிழருக்கு நன்மை கிடைத்து
என்ன பயன்?
வழக்கற்றுப் போகும் உலக மொழிகளில்
தமிழும் உள்ளடங்கக் கூடாதென
தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழுமென
போராடிப் பெற்ற அறுவடையை
பயனீட்ட வாழ்ந்து கொண்டு
போராட முயற்சி எடுப்போமே!

உறவுகள்

அன்புத் தோழர்களே... தோழிகளே...
தேவைகளைத் தேடி
நாங்கள்
அங்காடியில் மட்டும் ஒன்றுகூடவில்லையே
மக்களாயத்தையும்
நாடிய வண்ணமே வாழ்கின்றோம்!
வழங்குவோரும் வாங்குவோரும்
ஒன்றுகூடினால் வணிகம் மட்டுமல்ல
நல்லுறவும் மலருமே!
ஒன்றையும் கொடுத்துப் பெறாமலே
நல்லுறவாய் இருக்குறோம் என்றால்
பொய் தானே!
நம்மை அறியாமலே
நாங்களே
அன்பை, அறிவை, மதிப்பை மட்டுமல்ல
கற்போடு பழகி, பண்பாட்டைப் பேணி, உதவிகள் செய்து
அடுத்தவர் உள்ளத்தை உரசுவதனாலேயே
உறவுகள் ஆகின்றோம் என்பது
மெய் தானே!

தேர்தல் காலங்களில்...

கரும்பு தின்னக் கூலியா வேணும்!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேணும்!
உண்மையை ஏற்றுக் கொள்ள வேணும்!
ஒன்றை மட்டும் அறிய வேணும்!
"வாக்குகளை விற்காது இருக்கணும்!"

சிலருக்குத் தான்


நித்திரை வந்தால் பாய் வேண்டாம்
பசி வந்தால் கறி வேண்டாம்
சிலருக்குத் தான்...
தலையிடியும் காய்ச்சலும்
தனக்கு வந்த பின்னர்
சொன்னவர்களின் உண்மை இது!

கடன் பற்றிய துளிப்பாக்கள்(ஹைக்கூக்கள்)

வாங்கேக்க இனிப்பது கொடுக்கேக்க புளிக்கிறது
மகிழ்வாய் வேண்டிக் கொடுக்கேலாட்டிச் சாகிறது
"கடன்காரன் கேட்கையில்..."

கடன் வேண்டிக் களியாட்டம் போடலாம்
கடன்காரன் நெருக்கினால் தான் திண்டாட்டம்
"உறவுக்குப் பகை கடன்!"


கை வளம்(கை விஷேடம்)

ஒருவர் : புத்தாண்டு காலத்தில் என்ன ஓய்வில்லாத வேலை?

மற்றவர்: இன்றைக்கு உழைத்தால் கோடி பணம் ஈட்டலாம்!

முதலாமாள்: ஏப்படி? எப்படி?

இரண்டாமாள்: கை வளம் நேரம் பார்த்து வீட்டுக்கு வீடு கையேந்தப் போவதாலே...

கை வளம்(கை விஷேடம்)


சிலரது கையால் சிறு தொகைப் பணம் வேண்டி காசுப் பெட்டிக்குள் வைத்த பின்னர், வணிகமோ கொடுக்கல் வாங்கலோ எல்லோரும் செய்வது வழக்கம். இதற்குப் புத்தாண்டு பிறந்த பின்னர் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இச் சிறப்பு நேரத்தில் பணமுதலைகள், ஏழை முகங்கள் பாராது தங்கள் விருப்புக்குரிய உள்ளங்களிடம் பலர் கையேந்தி நிற்பர். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம்(கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது.

வழுக்கை

பிஞ்சு : வழுக்கை வலுப்பட சாவு நெருங்குது போல...

முத்தல்: எல்லாம் பொய்யே!

பிஞ்சு : எப்படி?

முத்தல்: சேற்றிலே வழுக்கையிலே விழுந்தால் எழும்ப முடியாத சுள்ளிகள், நீங்கள் தானே!

காலம்

தெருவில தண்டற் சோறு எடுக்கையிலே
"பணம் இல்லாட்டி
பிணத்தைக் கூட நாயும் தேடாது" என்பதை
நேற்றுப் பட்டறிந்தேன்.
இன்று
நல்வாய்ப்புப் பரிசாக
என் கைக்கு 500 இலட்சங்கள்!
உறவுகளின்றித் தெருவில கிடக்கையில
காறித் துப்பியவர்களும்
ஒதுக்கி வைத்தவர்களும்
கழித்து விட்டவர்களும்
பரிசோ கைக்கெட்ட முன்னர்
என் வீட்டுக்குப் படை திரண்டுவிட்டனர்!
ஊர் நாய்கள் என் தெருவில் குரைக்க
நாடறிந்த செய்தி இது!

Thursday, 17 October 2013

இணைய உலகில் உலாவர இணைவோம்


உலக வலம் இலகுவாயிற்று
இணைய வலம் உலகமாயிற்று
Chareles Babbage, Von Newmann
கணினியின் இரு கண்களாயினரோ
ARPANET, NSFNET இரு சாராரும்
இணையத்தின் பெற்றோராயினரோ
Internet - 2 தோன்றிவிட்டதாமே!
ஓ! இணையத்தின் (Internet - 2) வாரிசுவாகவோ!
எனது பெற்றோருக்கு
கண்ணுக்கெட்டாத கணினியில்
எனது பிள்ளைகள்
இணையமென்று கண்ணைக் கெடுக்குதுகள்...
அடடே! Filter Glass இருக்குத்தானே!
அது உங்க நினைப்பு!
பெத்தவங்க நினைப்பெல்லாம்
பிள்ளைகள் Internet Cafe இல் என்றுதானே!
காலமிப்படி ஓடிக்கொண்டிருக்க
எம்மை நாமே மூடிக்கொள்ளலாமோ?
காலம் கடந்தேனும் கணினியைக் கற்போம்
இணையத்தில் இனியதை இனங்காண்போம்
காசோடு நேரம் விரையமென்றா
முடங்கிக் கொள்கிறீர்கள்?
உங்கள் கவலையை விட்டுவிடுங்கள்
இதோ Internet - 2!
இணைய வலம் கண்ணுக்கெட்டியதும்
நுனி விரலில் உலகம் உருளுமே!

குறிப்பு:- 2000 ஆண்டின் பின் இணையம் மேம்படுத்தப்படுகிறது என்ற செய்தி அறிந்ததும் எழுதியது. இப்பதிவு 2004 இல் ஈழத்து வன்னியில் இருந்து வெளியான அறிவுக்கதிர் சஞ்சிகையில் வெளிவந்தது.

Sunday, 13 October 2013

எனது எழுதுகோல்


எழுதுகோல் ஒன்று எனக்கிருந்தது
அதன் விலை
ஒரே ஒரு சதம் தான்!
அந்த எழுதுகோல்
எனது உற்ற நண்பர் - அது
இலக்கியங்களை எழுத உதவுதே!
எழுதுகோல் ஒன்றைக் கண்டதும்
என் உள்ளத்தில் எழுந்த
உண்மையைப் பகிர முடிந்ததே!
என் உயிர் இருக்கும் வரை
எழுதுவேன்...
எழுதும் வேளையில்...
எழுதுகோல்கள் நினைவுக்கு வருமே!


Saturday, 5 October 2013

நம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...


பள்ளியில் கற்றது
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
நம்மாளுகள் சொல்வது
"அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்"
கண் கண்ட சான்றுகள்
"பிள்ளைகள் தம் பெற்றோரை
முதியோர் இல்லங்களில் ஒப்படைத்தல்"
அடிக்கடி நினைவில் தோன்றுவது
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது"
"முதுமையிலும் இளமை" இல்லத்தில்
பிள்ளைகள் தம் பெற்றோரை ஒப்படைக்கையிலே
"எங்களை - இங்கு
தள்ளி விட்ட குற்றத்திற்கு
உங்கட பிள்ளைகள்
உங்களுக்கு ஒறுப்புத் தந்தனரோ" என
பழம் பழசுகள் சொல்லிச் சிரித்தனர்!
இந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்!

செய்தியும் விளம்பரமும்


ஈருளி (மிதிவண்டி/ bicyle) ஓட்டிகளை
தெருவெங்கும் காண்பது அரிது
ஏனென்று எண்ணிப்பார்க்கையிலே
விரைவாக வேலைக்குப் போகவே
உந்துருளி (Motorbike) ஓட்டக்காரர் மலிவு
ஆனால்,
அரசுக்குத் தான் வருவாய்
அப்படியிருப்பினும்
விபத்துகளில் சிக்கியோர் சாவு!உந்துருளி (Discovery) ஒன்றிற்கான
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றிலே
"இது ஓடாது; பறக்கும்" என
உறைப்பான வரியிலே (Dead Line) சொல்லி
நமக்கு விருப்பேற்றி
உந்துருளியை வேண்டு வேண்டென
விளம்பரம் செய்யக் கண்டேன்!

வருவாய்க்காகக் கத்திய
விளம்பரதாரர் பேச்சை நம்பி வேண்டிய
உந்துருளியை ஓடும் போது
"இது ஓடாதே; பறக்கிறதே" என
நம்மாளுகளும் ஓடுவதனாலேயே
மோதல்களும் (Accident) சாவுகளும் (Die)
நாட்டிலே மலிந்து போயிற்றே!முதன்நிலைச் செய்தி ஏடு ஒன்றிலே
முற்பக்கச் செய்தீயாக
"பல்சர் (Pulsar) பறந்தது; உயிர் பிரிந்தது" என
போட்ட தலைப்பின் கீழே
"ஒருவர் சாவு - அடுத்தவர்
நிலைமை கவலைக்கிடம்" என
போடப்பட்டிருந்த செய்தியே
நாட்டு நடப்பாயிற்றே!