Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Tuesday, 24 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

அறிஞர் சொக்கன் சுப்பிரமணியன் பிடியில் சிக்கிய அறிஞர் கில்லர்ஜி "பத்து கேள்விகள் கேட்டுப் பத்துக்கும் பதிலளிக்க" என்று என்னையும் தன் பிடிக்குள் சிக்க வைத்துவிட்டார். கில்லர்ஜி அவர்களிடம் உச்ச முடியுமா? முத்துக்கு முத்தாகப் பத்துக்குப் பத்தாகக் கேள்வி - பதில் போட்டிட்டு "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்று கேட்கலாமோ? கேட்டிட்டாங்களே! ஆகையால் என் பதிலையும் கிழே பதிவு செய்கிறேன். 

1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறு அகவை வரை வாழ்வேனா என்பது ஐயம் தான்...
நூறாம் அகவைப் பிறந்த நாள் வரை வாழ முடிந்தால் நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு எழுதுகோல் வழங்கிப் பாபுனையக் கற்றுக்கொடுப்பேன். நம்மவூரு சித்தி விநாயகர் கோவில் முன் நூற்றுக் கணக்கானோருக்கு மதிய உணவு வழங்குவேன். வசதிகளைப் பொறுத்து மேலும் நல்லன செய்வேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

காலத்துக்குக் காலம் விருப்பங்கள் வேறுபடலாம். ஆயினும், விருப்பம் / நாட்டம் உள்ள எல்லாம் கற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் / விரும்புவேன். அப்படி இருப்பினும் முதன்மையாகத் தமிழ், அடுத்துக் கணினி நுட்பம். 

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

கடைசியாகச் சிரித்த நாள், திகதி நினைவில் இல்லை. ஆனால், சிரித்தேன். நம்ம ஜோக்காளி தளத்துத் தமிழ்மணம் நிலை (Rank) இரண்டாக இருந்தும் "என்னை நிலை (Rank) நான்கிற்கு உயர்த்திய வலை உறவுகளுக்கு நன்றி" என்றிருந்ததைப் பார்த்துத் தான்...

4. 24மணி நேரம் மின்தடை (பவர்கட்) ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகலாயின் அம்மன் கோவில் தெற்கு வாசலில் இருந்து காற்று வாங்கப் போவேன். பால்நிலாவாயின் வீட்டு முற்றத்தில் பொழுது போகும். முன்னிரவாயின் அந்தி சாயுமுன் உண்டு உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லையாயின் 
"வேளாவேளைக்குப் பணம் செலுத்தியும்
நாள் முழுக்க மின்னொளி இல்லையே!" என்று கவிதை எழுதக் கற்பனை பண்ணுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

கணவன்-மனைவி ஒற்றுமை வேண்டும். ஒட்டி உறவாடப் பண வருவாய் வேண்டும். கட்டிப்புட்டால் பிறக்கும் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும். இதற்கு மேலே சொல்லலாம். ஆனால், அவங்க காது கொடுத்துக் கேட்கமாட்டாங்களே!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகெங்கும் நம்பிக்கை இல்லாமையே அடிப்படைச் சிக்கல் (பிரச்சனை). உறவுகளிடையே நம்பிக்கை இல்லாமையே மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம். எனவே, நம்பிக்கையை ஏற்படுத்த உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவேன். நம்பிக்கை இல்லாமையைப் போக்கினால் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டலாம்.

7. நீங்கள் யாரிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பீர்கள்?

நன்கு அறிந்தவர்களிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பேன். ஆனால், தனியொருவரிடம் கேட்கமாட்டேன். நான்கைந்து ஆள்களிடம் கேட்பேன். பின் எல்லோரும் சொன்னதில் பொதுவானதைப் பின்பற்றுவேன்.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

என்னை ஆய்வு செய்ய வருவோருக்குக் குறித்த தகவல் பொய்யானது என விளக்குவேன் அல்லது உண்மை நிலையை விளக்குவேன். ஆனால், தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராகப் போராட மாட்டேன். ஏனெனில், அவர்கள் தானே என்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள் (பிரபலமாக்குகிறார்கள்).

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அவர் சொல்வதைக் கேட்டு, அவரது துயரத்தை ஏற்று 
"இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை
ஆயினும்,
இழப்புகளுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும்!" என ஆற்றுப்படுத்த முயற்சிப்பேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

மூலை முடுக்குகளில் கிடக்கும் முழு நூல்களையும் புரட்டிப் படிப்பேன். எழுதுகோலையும் எழுதுதாளையும் எடுத்து ஏதாவது எழுதுவேன். கணினியை இயக்கி வலைப்பூக்களில் நண்பர்களின் பதிவுகளைப் படிப்பேன். 

கீழ்வரும் வலைப்பூக்களின் அறிஞர்கள் போட்ட பிடியில் நீங்கள் சிக்கவில்லையாயின் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கின்றேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன். பொதுவான இந்த அழைப்பைப் பணிவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

உள்ளம் திறந்து தத்தம் உணர்வுகளைப் பகிர்ந்து வலைப்பூ உறவுகளுக்குள் என்னையும் உள்வாங்கி; நெருங்கிய உறவாக்க "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்ற பகிர்வோடு கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது நன்றிகள்.