Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Tuesday, 15 July 2014

பா புனையத் தோன்றிச்சே!

வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும்
நிறை மாதப் பெண்
சுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்?
குழந்தை நெஞ்சாங்கூட்டை
தலையாள் இடிக்குது என்பாள்...
எப்பன் சரிந்து கிடந்தால்
இடம், வலம் பார்த்து
குழந்தை
காலால் உதைக்குது என்பாள்...
"மேல் வயிற்றில் இடி என்றால்
ஆண் குழந்தையடி
கீழ் வயிற்றில் இடி என்றால்
பெண் குழந்தையடி" என்று
பழம் கிழம் ஒன்று
முணுமுணுத்து ஓயவில்லை
"அம்மோய்..... அம்மோய்.....
அடி வயிறு குத்துது..." என்றாள்
பிள்ளையைச் சுமந்தவள்...
சட்டுப் புட்டென்று
அண்டை அயலுக்குச் சொல்ல
அடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...
"தலைப் பிள்ளையை
வீட்டில வைச்சுப் பெற ஏலாது
மருத்துவமனைக்குக் கொண்டு போ!" என்றாள்
வந்த மருத்துவிச்சியும்...
அடுத்த கணப்பொழுதில்
வயிற்றுப் பிள்ளைக்காரியை
மருத்துவமனைக்கு ஏற்றிப் பறித்தார்கள்...
அங்கே அவளும்
என்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ
எவருக்குத் தான் தெரியும்!

இங்கே பாருங்கோ
பயணிகள் பேரூந்துக்கு வாயிருந்தால்
எப்படியோ
எத்தனையோ சொல்லியழுமே!
சின்னஞ் சிறு ஊர்திக்குள்ளே
பென்னம் பெரு
மலை போன்ற ஆள்களை
உள்ளே தள்ளி அடையிறாங்க...
ஊதிப் பெருத்த பூசணி போல
ஊர்தியின் நிலைமை...
பக்கக் கண்ணாடிகளை ஒதுக்கியே
ஆள்களின் மூஞ்சிகள்
வெளித்தள்ளும் நிலைமை...
வியர்வையால் குளிப்போரும்
இருக்கக்கூடும்...
"கால் கால் உளக்காதையும்..."
கீச்சுக் குரலில் பெண்ணொருத்தி...
கனவூர்தியில் பொருள் ஏற்றியது போல
இருக்கையில் இருப்போர்
நிற்போரின் பொருள்களைச் சுமப்பரே...
நிற்க இடமில்லாத போதும்
இயந்திரப் பகுதியின் மேலே கூட
கைக் குழந்தைக்காரரையும்
ஏற்றி உள்ளே அடுக்குவாங்கள்
ஓட்டுநரும் நடத்துனரும்...
ஊரிலிருந்து கிளம்பிய பேரூந்து
ஒருவாறு
நகருக்கு வந்து சேர்ந்தது...
பேரூந்து நிறுத்த முயன்ற வேளை
இயந்திரப் பகுதியின் மேலே
நின்றவளின் குழந்தை கைநழுவி
ஓட்டுனரின் கைப்பிடிக்குள் விழ
"ஐயோ என்ர குழந்தை..." என்று
குழந்தைக்காரி ஒருத்தி அழுதாள்...
"என்ர புண் காலில
பல கால்கள் உளக்கி
செந்நீர் ஓடுவதைப் பாரடா..."
என் தோளைத் தாவூம்
என் துணைவி...
யாரோ ஒருத்தி
மயங்கி விழுகிறாளெனக் கையேந்தினேன்...
"இன்றைக்குத் தான்
கடைசிச் சிகிச்சை என
மருத்துவமனைக்கு வருவதற்கிடையில
பேரூந்து நெரிசலில அண்ணே
அடி வயிறு நோகுது அண்ணே
என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ..." என
எவளோ பெத்த பிள்ளை
என் கைக்குள் வீழ்ந்தாளே...
தரையைத் தொட்டவாறு வந்த
பேரூந்து
ஆள்களை இறக்கிய பின்
குதிக் காலணி போட்ட பெண் போல
தரையை விட்டு மூன்றடி உயர
ஓடி மறைந்தது தெரியவில்லை...
ஆனால்
பிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல
பேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்
அதைவிட
பயணிகள் நாம் அடையும் நோ
அளவிட முடியாதே!

"வயிறு வீங்கிய
பிள்ளையைச் சுமப்பவள் போல
வீங்கிய பேரூந்தில்
பயணிக்கும் நாங்களும்
சுமந்தவள் பெற்ற பின்
வெளிவந்த குழந்தை போல
பேரூந்தாலே இறங்கிய பின் தானே
மூச்சு விடுகிறோம்!" என்று
பா புனையத் தோன்றிச்சே!