Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Friday, 25 March 2016

நான் சொன்னால்; நீங்கள் நம்ப மாட்டியள்! (கவிதைச் சிறுகதை)


வாலை ஒருத்தி
வறுமை வாட்டிய போதும்
கல்வியிலேயே நாட்டம் காட்டினாள்!
பெற்றோரும்
வயிற்றை, வாயைக் கட்டி
பொன்மகள் புண்ணாகாமல்
ஊட்டி, ஊட்டி வளர்த்தெடுத்தனர்!

இன்றைய சூழலில்
எந்தவொரு ஆணையும் கூட
ஏற, இறங்கப் பார்க்காத - அந்த
வாலையோ உயர் வகுப்பில் தேறினாள் - ஆனால்
மருத்துவப் படிப்புப் படித்து முடிக்க
ஏழைக் குடும்பத்தாருக்கு வசதி ஏது?
துரத்தும் வறுமையிலும் கூட
சாவை விரட்டினாலும் கூட
ஏழைக் குடும்பத்தார் - தங்கள்
மகளை மருத்துவராக்க வழியின்றி
விழி பிதுங்கத் திணறுகின்றனர்!

ஏழையென்றாலும் வறுமை வாட்டினாலும்
மருத்துவராகும் எண்ணத்தில் விடாப்பிடியாக
உறுதியெடுத்த வாலையோ
நஞ்சுத் (விசத்) தேர்வெழுதத் தயாராகினாள்!
கண்ணை இமை காப்பது போல
பெற்றோர் தன்னைக் காப்பது போல
ஒழுக்கம் என்ற வேலி போட்டு
கட்டிக் காத்துப் பேணி வந்த
கற்பெனும் (கன்னித் தன்மையை) அணிகலனாம்
இணைய வழி ஏலம் போட்டு
விற்று வரும் பணத்தை ஈட்டி
மருத்துவக் கல்வியைத் தொடர எண்ணினாள்!

"ஒரே ஒரு உலகிலேயே
ஒரே ஒரு நாட்டிலேயே
ஒரே ஒரு குடும்பத்திலேயே
ஒரே ஒரு குடும்பப் பெண்ணாலேயே
தன் கற்பெனும் (கன்னித் தன்மையை) அணிகலனை
உண்மையிலேயே விற்க விரும்புகிறேன் - ஆனால்
ஆறாண்டு மருத்துவக் கல்விச் செலவை
முன்கூட்டியே தந்துதவ வேண்டும்!" என
அப்பன், ஆத்தாள் அறியாமலே அழகாக
விளம்பரம் வடிவமைத்து வெளியிட்டாள்!
விளம்பரம் வெளியிட்டவள்
வீணே தன்னை இழக்க விரும்பாமல்
விலாவாரியாக விடுப்புக் கேட்டு
வருவாய் தருவோரை எடைபோட்ட வேளை
ஆங்கோர் அறியாதவன் அகப்பட்டான்!

ஒரே ஒரு மருத்துவராகும் எண்ணத்திற்காய்
ஒரே ஓர் ஆளுக்காய்
ஒரே ஒரு படுக்கையிலேயே
பொன்னெனப் பேணி வந்த
கற்பெனும் அறத்தைப் பேண முடியாத
துயரைக் கொஞ்சம் மறந்து - அந்த
அறியாதவனிடம் தொடர்பைப் பேணினாள் - அந்த
மருத்துவராக எண்ணிய ஏழை வாலை!
கற்பெனும் அறத்தை விற்றுப் பணமீட்டி
மக்களைக் காக்க மருத்துவராக எண்ணிய
ஏழை வாலை மேலே அன்பு மேலிட
அவளை அறியாத அந்தக் காளையும்
ஆறாண்டு மருத்துவக் கல்விச் செலவை
உடனடியாகக் கொடுப்பதற்கு இணங்கினாலும்
ஒரே ஓர் உடலுறவுக்கு மறுத்து - அதற்கு ஈடாக
கற்பெனும் அறத்தைப் பொன்னெனப் பேணி
மருத்துவராக மக்களுக்குத் தொண்டாற்ற
முன்வந்தால் போதுமென ஆணையிட்டான்!

அந்த வாலையும் அந்தக் காளையும்
எட்டாத் தொலைவில் இருந்து கொண்டே
கற்பெனும் அறத்தைப் பேணும் உடன்பாட்டோடு
மக்கள் நலம் பேண மருத்துவராக்கும் எண்ணத்தோடு
சந்திப்புக்கு நாள் குறித்த பின்னாலே
இரு வீட்டார் பெற்றோரும் அறிந்ததும்
வானுயர மகிழ்ச்சி வெள்ளமே!
இடக்கு, முடக்காக இணைய வழி
பயணம் செய்து வழுக்கி விழுவோரிடையே
விலக்கி, ஒதுக்கி இணைய வழி
வடிகட்டிப் பயணித்து வென்றோர்களிடையே
கற்பெனும் அறத்தைப் பொன்னெனப் பேணி
மருத்துவராக்க உதவிய காளையையும்
தன்னை விற்றேனும் தன் மக்களைக் காக்க
மருத்துவராக எண்ணிய வாலையையும்
நான் சொன்னால்;
நீங்கள் நம்ப மாட்டியள் - இந்தக் கதை
அன்றொரு நாள் செய்தியாக வெளிவந்ததே!


குறிப்பு:- ஏழை மாணவி ஒருவள் தனது கன்னித் தன்மையை விற்று மருத்துவக் கல்வியைத் தொடரத் திட்டமிட்டு விளம்பரம் செய்து உதவி பெற்றதாகப் படித்த செய்தியை தங்களுடன் பகிர்ந்தேன். என் எண்ணங்களையும் புனைவுகளையும் (கற்பனைகளையும்) புகுத்தி ஒழுக்கம் பேணவும் சுவையைக் கூட்டவும் பா நடையிலே (கவிதைச் சிறுகதையாக) தந்தேன்.