Translate Tamil to any languages.

Wednesday, 12 April 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 05

எழுத்தின் பலம், உலகை நல்வழியில் செல்ல வழிகாட்டுதலாகும். எழுத்தின் பலமின்மை (பலவீனம்), எழுதியவரை உலகே ஒதுக்கி வைக்கலாம். அதெப்படி? நல்லன வெளிக்கொணர்வோர் வாசகர் உள்ளத்தில் குந்திவிடுவர். கெட்டதாயினும் தொட்டெழுதித் தலைகாட்ட முனைவோர் வாசகர் உள்ளத்தில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை. எழுதுகோல் ஏந்திய எல்லோரும் எழுதலாம்; எழுதியவை எல்லாம் ஊரார், உலகத்தார் போற்றும் இலக்கியம் ஆகவேண்டுமே! எனவே, எழுத்துப் பணி என்பது புனிதமானது; எல்லோரும் போற்றும் வண்ணம் வாசகர் உள்ளத்தை ஈர்க்கும் வண்ணம் பொறுப்புணர்வோடு எழுதலாம் வாங்க! வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க!!

"பதிவை/ கதையை எழுதிய பின்
முடிவை
வாசகர் வாசித்தறிய விடலாம்
அல்லது
வாசகரைத் தீர்மானிக்க விடலாம்
இல்லையேல்
இப்படி முடிவு கொள்ளலாமென
உதவிக் (Hint) குறிப்பிடலாம்
அல்லது
ஈற்றில் நாமே
முடிவைச் சொல்லி விடலாம்!
இதனால்
வாசகர் நிறைவடைய
வாய்ப்புகள் அதிகம் என்பேன்!" என்றவாறு
வலைப்பூ ஒன்றில் கருத்திட்ட நினைவு!
தமது படைப்புகளில் இந்த நுட்பங்களைக் கையாண்ட படைப்பாளிகள் புகழ் பெற்ற படைப்பாளிகளாக நம்முன்னே வாழ்ந்திருக்கிறார்கள்.

பிறிதொரு வலைப்பூவில் சமகால இளசுகளின் போக்கை எண்ணி, பதிவர் ஒருவர் வெளியிட்ட பதிவிற்கு நானிட்ட கருத்தைக் கீழே காண்க. அதன்படி, பின்விளைவை உணராத இளசுகளின் போக்கு நல்ல அறுவடை ஆகாதே!
திரைப்படங்கள்
உணர்ச்சிகளைக் கிளறிவிட
திரைப்படம் பார்த்த இளசுகள்
எல்லோருமே
உணர்ச்சிகளோடு மோதுறாங்க...
மோதலில் வென்றவர்கள்
காதல் பக்கம் நாடுவதில்லை...
மோதலில் தோற்றவர்கள்
(உணர்ச்சிகள் வெல்ல)
காதல் பக்கம் நாடுகிறார்கள்...
இதில்
ஆணும் பெண்ணும் சமமாகுமே!
இதற்கு
மக்களாய/குமுகாய (சமூக) விழிப்புணர்வே மருந்து!

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் என்றால் முகநூலில் (Facebook) எழுத வேண்டாம் என்று எண்ணக்கூடாது. முகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதியதைத் தொகுத்தால் கூட வலைப்பூக்களில் (Blog) சிறந்த ஆவணமாகப் பேணலாமே! எடுத்துக்காட்டாக எனது முயற்சிகளை எண்ணிப்பாருங்கள்.

சித்திரை முதல் நாள்
முட்டாள் நாள் (ஏப்பிரல் பூல்) என்கிறாங்க
மாற்றாரை முட்டாளாக்கத் தான் என்று
முயற்சிகள் பல எடுக்கிறாங்க - அதற்கு
மூளை வேலை செய்யிற அளவுக்கு
தன் வாழ்க்கையில் தான் முன்னேற
மூளை வேலை செய்யிறதாக
எனக்குத் தெரிய வில்லையே!

இப்படி முகநூலில் (Facebook) சிந்திய துளியை உங்களுடன் பகிருகிறேன். இன்னொருவர் முகநூலில் ''வாழ்க்கையே போராட்டம்'' எனத் தனது கைவண்ணத்தைக் காட்டினார். அதற்கு நான் வெளிப்படுதிய எனது கைவண்ணத்தைக் கீழே படிக்கவும்.

என் வீட்டில 24 மணி நேரத்தில
அப்பன், ஆத்தாள், மாமன், மாமி,
பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும்
உண்ண, உடுக்க, இருக்க என
எல்லாவற்றிற்கும்
ஏற்படும் செலவை ஈடுகட்ட
உழைத்து வருவாய் ஈட்ட
முகம் கொடுக்கும் போராட்டமே
என் வாழ்க்கை ஆச்சு...
ஆகையால்
''வாழ்க்கையே போராட்டம்''

நிலவைப் போல (பகலவனில் தங்கியிருந்து) நாம் அடுத்தவரில் தங்கியிருந்து வாழக் கூடாது. தானே எரிந்து எரிந்து ஒளி தரும் பகலவனைப் போல, நாமும் வாழ முயற்சி எடுக்கவேணும். அது பற்றிய எனது கிறுக்கலைக் கீழே காணலாம்.
"இரவில் நிலா மின்னுவது   
இரவல் ஒளியால்... 
இரவல் வாங்கி, வாங்கியே
ஒரு நாள் ஓடி ஒளிந்து கொள்கிற" என்றவாறு
நம்மாளுங்க இருப்பதை
வானிலிருந்து கடவுளும் பார்க்கிறார்!
தன்னொளிப் பகலவனாக
(சுய ஒளிச் சூரியனாக)  
எப்ப தான் நம்மாளுங்க
மின்னப் போறாங்களோ   
எனக்கும் தெரியவில்லையே!

காலத்திற்கு ஏற்ப
எமது செயல் வடிவம் மாறலாம்
ஆனால்,
காலம் மாறினாலும்
எமது இலக்கு மாறாதே!
விடிய விடிய எழுவோம்
விழ விழ எழுவோம்
முயன்று முயன்று வெல்வோம்
2017 இலும் அப்படி ஆகட்டும்!
நல்லதை எண்ணி
நல்லதைச் செய்து
நற்பெயர் ஈட்ட
நன்றே முயற்சிப்போம் - அதை
இன்றே செயற்படுத்துவோம்!

முகநூலில் (Facebook) கீழுள்ளவாறு படமொன்றைப் பார்த்துக் கிறுக்கிய வரிகளைக் கீழே பார்க்கலாம்.

ஒருவர் மாற்றாரை
துன்புறுத்துவதிலோ
அவமானப்படுத்துவதிலோ
நிர்வாணப்படுத்துவதிலோ
ஒருவர் மாற்றாரின்
நிர்வாணத்தைப் பார்ப்பதிலோ
செயலைக் கண்காணிப்பதிலோ
உடமைகளைத் திருடுவதிலோ
மகிழ்ச்சி / நிறைவு அடைவாராயின்
அந்த ஒருவரின்
சொந்த இயல்பு நடத்தையில்
பிறழ்வு (நிலைக் குலைவு) இருக்கலாம் - அது
உள (மன) நோயை ஏற்படுத்தலாம்!
இவ்வாறானவர்களை
உளவளத் துணையாளர்களின் உதவியுடன்
குணப்படுத்தலாமே!

முகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே! வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க!! துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்கள் (Blog) உதவுமே! வலைப்பூப் பதிவுகளை மின்நூலாக்கக் கீழ்வரும் தளங்கள் உதவுகின்றன. நீங்களும் உங்கள் வலைப்பூப் பதிவுகளை மின்நூலாக்க முயற்சி செய்யலாம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது துணை வலைப்பூவூடாக வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்குவதோடு பரிசில்களும் வழங்குகின்றது. கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி இணையுங்கள்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!