Translate Tamil to any languages.

Friday, 5 May 2017

வாழ்க்கையில் சுகங்களைத் தேடிச் சாகலாமா?

வாழ்க்கையில் மகிழ்ச்சியான பொழுதுகளைத் தேடி அலைவதை விட, மகிழ்வான பொழுதுகளை நாம் தான் அமைக்க வேண்டும். நோய்களை எமது உடலில் வந்து குந்தியிருக்க விடாமல் தடுப்பதை விட, நோய்களே எமது உடலில் வந்து குந்தியிருக்க இடமளித்தால் மகிழ்ச்சி கிட்டுமா? இதனடிப்படையில் பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

ஆண், பெண் உடலமைப்பில் மாற்றங்கள் வந்ததும் (அகவைக்கு வந்ததும்) பாலியல் (Sex) உணர்வுகளும் தூண்டப்படும். ஆயினும் மக்களாயம் (Society) கண்காணிக்கும் என்ற அச்சமே தவறான வழிகளில் அவர்களைச் செல்லவிடாமல் தடுக்கிறது. எப்படியோ பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் தவறு செய்யத் துணிந்தும் விடுகிறார்கள். வழமைக்கு மாறாக பதினெட்டு அகவை (Major) ஆகாமலே தவறு செய்பவர்களும் இருந்து விடலாம்.

அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்ட இணையர்கள் மட்டுமே பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர வேண்டும். ஏனையோர் பாலியல் (Sex) உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயலவேண்டும். இது மக்களாயக் (Society) கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவோ தங்களது நற்பெயரை ஈட்டவோ உதவும் என்பேன். இனித் திருமணமானவர்கள் "தாம் செய்யும் தவறுகளால் சாவை நாடுவதேன்?" என்று எண்ணிப் பார்ப்போம்.


 மணமுடித்த இணையர்களின் முதல் நாள் இரவில் (First Night) இருந்தே, அவர்கள் பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர உரிமை பெற்று விடுகின்றனர். "சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை (Sex)" என்ற முதுமொழியின் படி அவர்களுக்கு எவரும் பாலியல் (Sex) சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியிருக்கையில் உளநல மதியுரைஞராக (Psychological Counsellor) நான் எதைச் சொல்ல முடியும்?

"மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடவேண்டும். குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் குடும்ப நல மருத்துவரின் மதியுரையைப் பின்பற்ற வேண்டும். அப்படி மருத்துவரை நாடியும் மருத்துவருக்குப் பொய் சொல்வதால் சாவைச் சந்திக்க வேண்டி வரலாம்." என்பதையே நான் சொல்ல வந்தேன்.

எடுத்துக்காட்டாக மணமுடித்த இணையருக்குக் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட எண்ணியிருந்தும் குழந்தை கருத்தரித்து விடுகிறது. கருத்தரித்து நூறு நாளை நெருங்கியதும் மருத்துவரை நாடிக் கருக்கலைப்புச் செய்யச் சிலர் முனைகின்றனர்.

அவ்வேளை "எவ்வளவு காலம் மாதவிலக்கு (Period) வரவில்லை?" என்றதும் "ஒன்றரை மாதம் அல்லது இரண்டு தடவை" எனப் பதிலளித்து விடுகின்றனர். மருத்துவரும் கருக்கலைப்புச் (Abortion) செய்ததும் அதிக குருதிப் பெருக்கால் குறித்த பெண்ணும் சாவடைந்து விடுகிறாள். இவ்வாறான சாவு தொண்ணூறு நாள்களின் பின் கருக்கலைப்புச் (Abortion) செய்வதால் ஏற்படுகிறது. எனவே, மருத்துவருக்குப் பொய் சொல்லிச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது தூரத்து உறவுக்காரக் குடும்பத்தில் நிகழ்ந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. அக்குடும்பத்தில் இணையர்கள் இருவரும் படித்தவர்கள். அடிக்கடி வெளியிடங்களுக்கு மாநாடுகளுக்கு (Conferences) சென்று வருவர்.

அவ்வேளை மணமகளோ மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட (Period Delay Tablet) மருந்துண்டு வந்திருக்கிறார். அதற்காக நோர்திஸ்ரரோன் (Norethisterone) மருந்து பாவிக்கப்படுவதாகத் தகவல்; மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்துங்கள். ஆனால், குறித்த பெண் மாதவிலக்கைத் தள்ளிப்போட என்ன மருந்துண்டார் என்பதை நானறியேன்.

ஆயினும் குறித்த பெண் கருப்பைப் புற்றுநோய் வந்து சாவடைந்த பின்னரே, இந்த உண்மை கசிந்தது. மருத்துவர் வழிகாட்டலின்றி மருந்துக்கடையில (Pharmacy) இவ்வாறான தேவைகளைச் சொல்லி மருந்துண்போருக்கு இச்சாவு நல்ல பாடமாக இருக்கட்டும்.

அடுத்து ஆண்களின் தவறான நடவடிக்கையில் ஒன்று ஆண்மைக் குறைவைப் போக்குமென ஊக்கமருந்தாக வயாக்ராவைப் (Viagra) பாவித்தல் ஆகும். இவர்களும் மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்.

இந்த மருந்தைப் பாவிப்பதால் ஆண்களின் குருதிக் குழாய்கள் விரிவடையும். அவ்வேளை குருதி விரைவாகப் பாய ஆண்மை வலுப்பெறுகிறது. இதனால் இருதய (Heart) நோயுள்ள ஒருவரின் உயிரைக் குடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் வயாக்ரா (Viagra) பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அடடே! "பெண்களுக்கு வயாக்ரா (Viagra) இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். ஃபிலிபான்செரின் (Flibanserin) என்ற பெயரில் இருக்கிறதாம். இது பெண்களின் முளையில் வேதியல் மாற்றங்களைத் தூண்டிவிடுமாம். இதனால், பெண்களின் உடலில் பாலியல் இச்சையைக் கூட்டிவிட முடிகிறதாம். இதுவும் பக்க விளைவுகள் நிறைந்த உயிரைக் குடிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. பெண்களும், மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் இதனைப் பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

"பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ளவும் றோஹைப்னொல் (Rohypnol) என்ற மருந்து பயன்படுகிறதாம். எளிதில் நீரில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தைப் பெண்ணுக்கு நீரில் கரைத்துக் கொடுத்ததும் சிறிது நேரத்தில் போதை ஏறி விடுமாம். இந்நிலை 11 - 12 மணி நேரம் வரை நீடிக்குமாம். சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அப்பெண் வந்து விடுவாளாம்.

இதனால் பெறுமதியான அணிகலன்களைப் பறிகொடுக்கவும் தமது கற்பை இழக்கவும் வாய்ப்புண்டாம். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணுச் சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க இயலாதாம். அதைவிடக் கொடுமை இதனை உண்ட பெண் தன் வாழ்வில் தாய்மை அடையவே இயலாதாம். இதனைத் தொடர்ந்து உண்டால், குறித்த பெண் இதற்கு அடிமையாகி விடுவாராம். மருத்துவர்களின் கருத்துப்படி, பக்க விளைவுகள் நிறையவே உண்டாம்." என்றவாறு நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்துச் செய்தி பொய்யா? மெய்யா? உங்களுக்குத் தெரிந்த குடும்பநல மருத்துவர்களிடம் இச்செய்தியைச் சொல்லி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துங்கள். அதன் பின் அவர்களின் மதியுரையைப் பெற்று, முற்காப்பு எடுத்து வாழ முயலுங்கள். பெண்களே! மிகவும் கவனமாகத் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

சொத்தை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலும். கற்பை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலாதே! இது பற்றிக் கணவன்மாரும் கவனமாக இருக்க வேண்டும். காமவெறியர்களின் கருவியாகவோ நீலப்படம் (Blue Film) எடுப்போரின் கருவியாகவோ ஈழத்தில் தமிழின அழிப்புக் கருவியாகவோ றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்து அமைந்துவிடாமல் பொறுப்புள்ள எல்லோரும் விழிப்பாக இருங்கள். உலகெங்கும் இந்த உண்மையைப் பறை சாற்றுங்கள்.

மகிழ்ச்சியான வாழ்வு தானே எமக்குத் தேவை. காத்திருந்து, காத்திருந்து அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்டு குடும்பமானதும் பாலியல் (Sex) உறவும் மகிழ்வும் கிட்டாமல் இப்படிச் சாகவேண்டாம். வீணே வேண்டாத மருந்துகளை நாடிப் போய்ச் சாவது சரியாமோ?

உயிரைக் குடிக்கும் மருந்துகளைப் பற்றிச் சொல்லிவிட்டு நானும் ஓடித் தப்ப இயலாதே! மருந்துகளின் பெயரைச் சுட்டியது எவரும் வேண்டிச் சாவென்று வழிகாட்ட அல்ல. மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி இவ்வாறான உயிரைக் குடிக்கும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பதை நினைவில் நிறுத்தவே! 

இலங்கையில் பேரினம் சிற்றினத்தை அழிக்க இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். வெவ்வேறு சாட்டுதலுடன் வெளிநாடுகளில் இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். எப்படியிருப்பினும் இம்மருந்துகளுக்குத் தடை வேண்டும். ஆனால், அரசு இம்மருந்துகளைத் தடை செய்ய முன்வருமா? இல்லையாயின், இம்மருந்துகளுக்கு எதிராகப் போராட வேண்டும். அதனை மேற்கொள்ள எவரிணைவார்?

ஆக மொத்தத்தில, தமிழர் பண்பாட்டையும் இயற்கைக் கட்டமைப்பையும் ஏற்று இம்மருந்துகளைக் கையாளாமல் வாழப் பழக வேண்டும். வயாக்ரா (Viagra) தேவை என்றால் அதற்கு ஈடான மருந்தை நான் தருகின்றேன். அதாவது, முதலில கொழுப்புணவை குறைத்து உண்ணுங்கள். அடுத்து உணவில் முருங்கைக்காய் (வயாக்ரா (Viagra) இற்கு ஈடான மருந்து முருங்கையே) கறி சேர்க்கவும். அடுத்து ஒவ்வொரு நாளும் 2km விரைவாக நடக்கலாம், 5km மிதிவண்டியில் மிதிக்கலாம், 5min துள்ளலாம், 10min உடற்பயிற்சி செய்யலாம்.

பாவரசர் கண்ணதாசன் "இரண்டடக்கேல்" என இருபாலாருக்கும் வழிகாட்டியுள்ளார். அதாவது மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. அதனால், உடலுக்குத் தீங்கு தான் ஏற்படும். அவ்வாறு தான் மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போடுதலும் ஆகும். மருந்துண்டு மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட்டால் இயற்கைச் சுழற்சியை மாற்றுகிறோம். அதனால், உடலியல் இயற்கை அமைப்புக்குக் கேடு செய்கிறோம். நேர் விளைவும் பக்க விளைவும் சேர்ந்து நோய்களைத் தான் தருமே! மாதவிலக்கு (Period) வரும் நாள்களைக் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்
(அதிகாரம்: ஒழுக்கமுடைமை, குறள் எண்: 131)

"ஒழுக்கமே எல்லோருக்கும் உயர்வைத் (நன்மதிப்பைத்) தரும், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்." என்ற வள்ளுவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

எப்பவும் பாருங்கோ...
ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் போதாதா?
ஒழுக்கம் கொஞ்சம் பேணவும் வேண்டுமே!
இயற்கையை ஏற்று
இசைந்து போகக் கற்க வேண்டுமே!
இயற்கையோடு இசைந்த
இல்லற வாழ்வே இனிய வாழ்வு!

முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. தன் (சுய) மருத்துவம் தன்னையே கொல்லும். மருத்துவரின் மதியுரைப் படியே மருந்துகளை உண்ணவும் வேண்டும். எனவே, மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடித் தீர்க்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்வை, நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!