Translate Tamil to any languages.

Monday, 3 July 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06

எவரும் திறன்பேசி வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக் காட்சி தருமே! திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க! இதோ எனது எடுத்துக்காட்டைப் பாருங்க.

"சிரிப்பு
உள/உடல் நலம் பேண
நல்ல மருந்து என்பேன்" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"கோபத்தின் போது 13 நரம்புகள் இயங்குமாம்
சிரிப்பின் போது 65 நரம்புகள் இயங்குமாம்
ஆகையால்,
கோபத்தை விட சிரிப்பு
உடலெங்கும் செந்நீர் (குருதி) சீராகப் பரவ
உதவுவதால் நோய்களை விரட்டலாம்!" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"எளிமையான புதுக்கவிதையை
இறுக்கமான புதுக்கவிதையாக
நறுக்கென வெளிப்படுத்தியவர்
கவிக்கோ அப்துல் ரகுமான்" என அவரது இழப்புச் செய்தி கேட்டதும் எழுதியது.

"பணம் உள்ளவரை உறவு" என்ற தலைப்பில்
"பணத்தைத் தேடும்வரை தெரியாது
படுக்கையில் கிடந்தால் தெரிகிறது...
தலையணைக்குக் கீழே உள்ள
பணத்தைக் கணக்கெடுக்க வரும்

உறவுகளை எண்ணிப் பார்க்கலாம்!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"நேற்றைய நல்லவை இன்று வழிகாட்டும்
நாளைய விடியலில் எண்ணியவை தான்
(எடுத்துக்காட்டாகச் சேமித்து வைத்த பணம்)
இன்று நாம் வாழத் துணைக்கு வருமாயின்
நாளையை நாளைக்கே பார்ப்போமாயின்
இன்று எப்படி வாழ்வது? - எனவே
முன்கூட்டியே திட்டமிட்டால் - எவருக்கும்
இன்றைய வாழ்வு சறுக்காது!" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"எந்த முகத்துக்கும் அஞ்சாமல்
சொந்த முகத்தைக் காட்டுங்கள்
உண்மையானவராயின்..." என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"முகநூல் பக்கம் வாங்க...
போட்டிகள் பலர் நடாத்துவாங்க
பங்கெடுத்துப் பயனீட்டலாமுங்க
பல்கலைக்கழகம் போகாமலங்கோ
BA, MA, MPil, Phd, Dr என்ற மாதிரிங்க
A4 தாளில் எழுதிய பதிவுக்குங்க
பல பட்டங்கள் அள்ளிக்கொடுக்கிறாங்க...
வழங்குவோர் யாரென்று தெரியாதுங்க
பெற்றவங்க பரப்புரை சொல்லுதங்கோ
இப்பவெல்லாம்
பட்டங்களுக்கே பெறுமதி இல்லையங்கோ..." என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"முகநூலில இப்ப புதிதாய்
பாப்புனைவோர் சங்கம் தொடங்கியாம்
கவிதைப் போட்டி நடாத்துறாங்களாம்
முதலிடம் - கவிதைக் கடவுள்
இரண்டாமிடம் - கவிதைப் பிரம்மா
மூன்றாமிடம் - கவிதை மன்னன்
பட்டங்களும் சான்றிதழுமாம்
வழங்கப்படும் என்கிறாங்க...
"நீங்களும் பங்கெடுத்தால்... வென்றால்...
கவிதைக் கடவுள் ஆகலாமே!" என்கிறாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால்
நான் பங்கெடுப்பேன் என்றதும்
"உலகக் கவிதை மன்னர்கள் சங்கம்" என்று
முகநூலில தொடங்கினார்கள் என்றால்
அப்படியும் கொடுப்பார்கள் என்றாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால் - அவங்க
முத்தின பைத்தியங்கள் தானே...
படித்துப் பெறவேண்டிய பட்டங்களை
எவரும் பரிசளிக்கலாமோ? - இப்பவெல்லாம்
தகுதியற்றவர்கள் முகநூலில
கவிதைப் போட்டி நடாத்துகிறாங்களோ
என்றதும்
என்னுடைய நூறாவது காதலி
ஓடி மறைந்திட்டாளே! - எப்படியோ
நூற்றியோராவது காதலியைத் தேடணும்
அதற்குக் கூட
முகநூலில நிறைய வசதி இருக்கே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"சொந்த வேலை புரிவோருக்கு
ஓய்வு என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம் என்பதும் கிடையாது
ஆனால்,
உள்ளத்தில் நிறைவு கிட்டுகிறதே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"உலகில் மே-18 ஆம் நாள்
ஈழத் தமிழர் உறவுகள்
முள்ளிவாய்க்காலில்
செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்
உலகமே இரங்காத நாள்! - ஆயினும்
ஈழத் தமிழரின் உண்மை நிலையை
உலகம் எங்கும் ஆழப் பதித்த நாள்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.
இறுதிப் போரில் (20/05/2009 வரை) நெருக்குண்டு
தப்பியோரில் நானுமொருவன்
போரில் புண்ணாகிய (உடல் புண், உளப் புண்) உறவுகளை
என்னாலும் மறக்க இயலவில்லை
இயலுமானோர் உதவியதாக - இதுவரை
எனக்கும் தெரியவில்லை! - என்றாலும்
தன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல் உதவியோடு
வாழ்வில் நடைபோடும் - எங்கள்
ஈழத் தமிழர் நிலையை
உலகம் எட்டிப் பார்க்கவில்லையே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"நான் பிறந்தாலும் 'லைக்'
நான் மணந்தாலும் 'லைக்'
நான் கிடந்தாலும் 'லைக்'
நான் இறந்தாலும் 'லைக்'
எதற்கெல்லாம் 'லைக்'
எனக்கோ தலையைச் சுற்றுது..." என்றவாறு தோழன் ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"ஆணுக்கு நிகர் பெண் என்பது பொய்!
ஆணைவிட உயர்ந்தவள் பெண் என்பது மெய்!
281 நாள் குழந்தையைச் சுமந்து ஈன்றவள் - அவள்
எங்கள் உலகில் உயர்வானவள் - அவளை
இப்படிப் பார்க்காத கண்களும் குருடே!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"வெற்றிகள் கிடைத்து விட்டாலும்
சோர்ந்து விடாதே - இனியும்
வெல்வதற்குப் பயிற்சிகள் தேவை!
என்றும்
பயிற்சிகளும் முயற்சிகளும் தான்
அடுத்து வரும் வெற்றிகளை
தீர்மானிக்கப் போகின்றன!" என்றவாறு எனது பெறாமகளுக்கு வாழ்த்துக் கூறும் போது இழையோடியது.

"பதினாறு செல்வங்களும் பெற்று
சீரும் சிறப்புமாக
கண்ணை இமை காப்பது போல
ஒருவரை ஒருவர் காத்து
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்றவாறு தோழி ஒருவரின் திருமண அழைப்புக்குப் பதிவு செய்தேன்.

"நாளும் விடிகிறது
பொழுதும் கரைகிறது
நமது செயலும் பதிவாகிறது
ஆனால், நல்ல செயல்களே
நம்மை அடையாளப்படுத்துகிறது!
எல்லாம்
இன்று போய் நாளை வர
நேற்றைய நடப்பு நினைவூட்டுமே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"தங்கச்சியின் பேச்சும் உணர்வும்
எங்கள் தமிழர் உள்ளங்களில்
மாற்றத்தை ஏற்படுத்தினால் - அதுவே
தமிழுக்கு வெற்றி!" என்றவாறு மேற்காணும் ஒளிஒலி (Video) நாடாவைப் பார்த்ததும் எழுதியது.

"ஊருக்கு நல்லது செய்வோம்
சாக மாட்டோம், வாழ்வோம்!
நேரம் கரைவது போல
வாழ்க்கையும் கரைந்து போகும்
தன்னலம் கருதாது
பிறர் நலம் பேணி வாழ்வோர்
காந்தி, பாரதி போன்று
இன்றும் வாழ்வதைப் பாரும்!
சாவு பற்றி எண்ணாது
நேரத்தை வீணடிக்காது வாழ்வோம்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"புகைத்தல்
உடல் நலத்திற்குக் கேடாகலாம் என்பது
அரச எச்சரிக்கை! - நானும்
வேற மாதிரி எச்சரிக்கிறேன்...
புகைத்தலால் தான்
புற்றுநோய் வந்து உயிரிழந்தேன்
இவ்வண்ணம் - உங்கள் முன்னே
புகையாக உலாவும் ஆவி!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"வலைப்பூ நடாத்துவது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
பேணுவதென்பது இலகுவானதல்ல!
எழுதுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் விரும்பும் வகையில்
எழுதுவது இலகுவானதல்ல!
வெளியிடுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் கண்ணிற்கு எட்ட
முயலுவது இலகுவானதல்ல!
மொத்தத்தில இலகுவானது என்று
சொல்வதெல்லாம் - ஈற்றில
எத்தனையோ தடைகளைக் கடந்த பின்னரே
வெற்றிகளைத் தந்திருக்கிறது!
தங்கள் தமிழ் பற்று
தங்கள் விடாமுயற்சி
தங்கள் ஆளுமை, ஆற்றல்
தங்கள் பதிவர்களுடன் உறவைப் பேணும் சிறப்பு
தங்கள் வாசகர் விருப்பறிந்து வெளியிடும் ஆற்றல்
என்றவாறு நீளும்
தங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்!" என்றவாறு
இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் வலைப்பூவிற்கு
நான்காம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த வேளை எழுதியது.


முகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே! துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க!!

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!