Translate Tamil to any languages.

Saturday, 13 October 2018

பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!


எனது 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் (https://plus.google.com/u/0/communities/110989462720435185590)' குழும உறுப்பினர்களுக்கும் 'தமிழ் வலைப்பதிவகம்' வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களுக்கும் ஏனைய குழும உறுப்பினர்களுக்கும் எனது வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் தந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு அறிவூட்டிய அறிஞர்களாகிய வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள் ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!

2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன். பொத்தக உருவாக்கத்தை (அச்சிடும் பணி) தமிழகம்-திருச்சி இனிய நந்தவனம் சஞ்சிகை குழுமம் செய்து தருகிறது. நான் வெளியிடவுள்ள எனது பொத்தகத்தில் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களிடம் இருந்து 'எனது படைப்பாக்கத் திறன்' பற்றிய சிறு குறிப்பினைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

விரும்பும் உள்ளங்களே! P.P.Size படம், புனைப் பெயர், இயற் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைப்பக்க முகவரி ஆகியவற்றுடன் 'எனது படைப்பாக்கத் திறன்' பற்றிய தங்கள் எண்ணங்களை சிறு குறிப்பாக 02/11/2018 இற்கு முன்னதாக wds0@live.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். வலைவழி நமது தமிழ் இலக்கிய உறவு தொடரும். தொடரவே நானும் விரும்புகின்றேன்.

நான் 1986 இலிருந்து எழுதினாலும் இதுவரை பொத்தகமேதும் வெளியிடாமைக்கு பொருண்மியும் ஏதுவாகலாம். அச்சடித்த பொத்தக வெளியீட்டில் வேறு சில சிக்கலும் வரலாம். எனது மண்ணில் (யாழில்) கண்டவற்றைக் கீழே பதிவு செய்துள்ளேன்.

என் நிலை என்னவாகுமோ?


பாவலர் ஒருவள்
பாக்களின் தொகுப்பைப் பொத்தகமாக்கி
வெளியீட்டு விழாவுக்கு
1000 அழைப்பையும் அனுப்பியிருந்தார்!
வெளியீட்டு விழாவிற்கு வந்ததோ 50 ஆள்கள்
அன்பளிப்பாகக் கொடுத்ததோ 10 ஆம்
200 உரூபா பொத்தகத்தை
வேண்டியவர் 10 ஆள்களாம்
எஞ்சிய 480 உட்பட அச்சடிக்க 81000 ஆம்
வெளியீட்டு நாள் செலவுக்கு 51000 ஆம்
நன்றியுரையில் சொல்லியழுத
பாவலரின் கதை கேட்டு
என் உள்ளம் புண்ணாயிற்று!
உண்மையில் நான் கூட
'பா நடையில புனைந்தவை' என்ற
பொத்தகத்தை அச்சடித்து வெளியிட
எண்ணி எண்ணி அழுகின்றேன்
'என் நிலை என்னவாகுமோ?' என்று தான்!

நூலின் பெறுமதியைக் கொடுத்து வாங்கலாமே!

பணக்காரன், வெளிநாட்டுக்காரன்
நூல் வெளியீட்டுக்கு அஞ்சான்
இருப்பினும் நூலை வெளியிட்டால்
அன்பளிப்பாக அள்ளிச்செல்ல ஆளிருப்பர்!
அப்படி வெளியிட்டு நட்டப்பட்ட
பணக்காரனின், வெளிநாட்டுக்காரனின்
வயிற்றெரிச்சலை, துயரத்தை எவரறிவார்?
முழு ஏழைக்கு நூல் வெளியீடு
எட்டாப் பொருத்தமாக இருக்குமே!
முழு ஏழை பாரதியைப் போல
தெருவிலே கரித்துண்டாலே எழுதி
எண்ணங்களை வெளியிட்டுச் சுவைப்பான்!
அரை ஏழைக்குத் தான்
அடுத்தவர் உதவி இருப்பின்
நூல் வெளியீட்டுக்கு வாய்ப்புண்டு!
இருப்பினும் சூழலில் கூடியுள்ளோருக்கு
வாய் மூலம் வெளியிட்டு மகிழ்வார்!
வாழ்வை எளிமையாக நடாத்தும் அக்காவோ
அத்தானின் சங்கிலியை
அடகு வைத்து வெளியிட்ட
'பட்டினி' கதைத்தொகுப்பை விற்று
அத்தானின் சங்கிலியை மீட்க முடியாமல்
அக்காவும் சாவை அணைத்துக் கொண்டாள்!
உண்மையைத் தான் சொல்லுறன்
நான் எழுதுவது கவிதையல்ல...
கவிதை போல எழுதியதைத் தொகுத்து
நூலாக வெளியிடத் தான் - நானும்
மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்தேன்!
நாளை நடாத்தும் வெளியீட்டு விழாவில்
வெற்றுத் தபாலுறையை நீட்டாது
20, 50ஐ உட்தள்ளித் தபாலுறையை நீட்டாது
நூலின் பெறுமதி நானூறைச் செலுத்தி
வருகை தருவோர் நூல்களை வேண்டினாலே
மனைவியின் தாலிக்கொடியை மீட்பேன்
இல்லையேல் நானும் சாவதே வழி!
நூலை வெளியிட்டோர் வயிற்றில அடிக்காமல்
வெளியீட்டுக்கு வருகை தருவோர்
நூலின் பெறுமதியைக் கொடுத்து உதவினாலே
'மகாவமிசம்' போல அழகானதொரு
'தமிழரின் தாயகம் இலங்கை' என
தமிழர் வரலாற்றைத் தானும்
எவரும் எழுத முன்வருவார் என்பேன்!

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!