Translate Tamil to any languages.

Sunday, 2 December 2018

நான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே!
இயமதர்மராசாவின் கட்டளைப் படி தான்
சித்திரபுத்திரனாரின் கணக்கின் படி தான்
இயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான்
பூலோகத்தில் இருந்து தூக்கியோரைத் தான்
விசாரித்துச் சொர்க்கமா நரகமா செல்வோரென
வேறாக்கும் பணிக்கு அழைத்தனர் போலும்!

இயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான்
சரத் முத்தெட்டுவேகம, கொல்வின் ஆர்.டீ.சில்வாவென
சிங்கள இடதுசாரிகளோட தான் - என்னையும்
வலப் பக்கமாகத் தான் இருத்திப் போட்டாங்களே!
என்னைக் கண்ட சரத் முத்தெட்டுவேகம தான்
யாழ்ப்பாணத்துக் குட்டியன் வந்திருப்பதாக - அந்த
கொல்வின் ஆர்.டீ.சில்வாவிற்கு அறிமுகமாக்க
ஆளுக்காள் என்னை நேர்காணல் செய்தனரே!

யாரண்ணே 'புலியண்ணை' எழும்பண்ணே என
பெரிய ஏட்டினை விரித்து வைத்தவாறே
சித்திரபுத்திரனார் தன் கணக்கினை வாசிக்க...
'எங்கையண்ணே உன்ர மூச்சுப் போனது' என
இயமதர்மராசா தன் கேள்விக்கணையை எறிய
'வில்லிபாற, நாவலப் பகுதியில தான்
செவ்விளநீர் வெட்டுகிற கத்தியால தான்
தமிழனென் தலையறுத்து வீழ்த்தினர்!' என்றேன்!

'தலையறுத்து வீழ்த்திவிட தமிழா - நீ
என்ன தான் கேடு விளைவித்தாய்?' என
இயமதர்மராசா இரண்டாம் கேள்விக்கணையை எறிய
'நுனிப்புல் மேய்ந்தளவு கற்றிருந்த கணினியறிவை
ஒன்றும் விடாமல் அப்படியே படிப்பித்ததால்
சிங்கள மாணவர் மகிழ்வோடு கற்றுயர
பொறாமை பொங்கியெழப் பொறுமையிழந்த
சிங்கள ஆசிரியர் சிலரென்னைக் கொன்றனர்!' என்றேன்!

இயமதர்மராசா அடுத்தவர் பக்கம் நகரவே
'தமிழ் - சிங்கள வேற்றுமையை விதைத்துத் தான்
அரசியலாளர் பிழைப்பு நடத்துகினம் போல...' என
சரத் முத்தெட்டுவேகமவும் தகவலறிந்து துயரப்பட
'தமிழும் சிங்களமும் சமனில்லை என்றதுமே
இலங்கை இரண்டாகாதது ஏன்?' என்றறிய
கொல்வின் ஆர். டீ. சில்வா கேட்டுக்கொள்ள
ஓரணியில் தமிழர் ஒன்றுபடவே நடந்தேறுமென்றேன்!

பாக்கிடிக்கிற கையுரல் உலக்கையால தான்
அம்மம்மாவுக்கு அடித்துத் தலை வீங்கியதும்
சம்பல் அரைத்துத் தந்தால் உண்பேனென
பெத்தவளுக்கே அடிக்கடி தொல்லை கொடுத்ததும்
என்றெண்ணிப் பார்த்தாலும் நூறாயிரம் முறைப்பாடுகள்
சித்திரபுத்திரனாரின் கணக்கின் படி இருக்கென்று
இயமதர்மராசாவோ நரகத்தில் வீழ்த்திவிடுவதாக இறுக்க
பால்குடி மறவாத பச்சிளம் அகவையிலே
அறியாமல் புரியாமல் நானாடிய ஆட்டத்திற்கு
என்னை மன்னிக்குமாறு காலில் விழுந்தழுதேன்!

இயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் - எவருக்குமே
மன்னிப்புக் கிடையாதென சித்திரபுத்திரனார் கைவிரித்து,
மாற்றாரை வாழவைக்க மதியுரை வழங்கினாலும்
அறியாமல் புரியாமல் கேடிழைத்து இருந்தாலும்
நாடெங்கும் நடுத்தெருவில் நாய்படாப் பாடுபட்டாலும்
ஆறுமாதம் ஓயாமல் உழுந்தாட்டும் ஒறுப்புண்டு - பின்
சொர்க்கமேயெனச் சித்திரபுத்திரனார் வாசித்த தீர்ப்பின் படி
சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேன் நானே!

இராமர் அணை எமக்குத் துணை!

இலங்கைத் தமிழ் மன்னரான
இராவணன் மீது போர் தொடுக்க
இந்தியாவின் அயோத்தி மன்னரான
ஆரியச் சக்கரவர்த்தி இராமர் புறப்பட
பாக்கு நீரிணையே இடைமறித்து நின்றதாம்!
இடைமறித்த பாக்கு நீரிணையைத் தான்
கடந்தால் தான் இராமர் வெல்லலாமென
தனது வானர சேனையோடு அனுமான்
முறைப்படி கட்டியமைத்த பாலம் தான்
இராமர் அணை/ பாலம் என்பது உண்மையே!
தலைமன்னார் - இராமேஸ்வரம் தீவுகளைத் தான்
17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தி இணைத்த
இராமர் அணை/ பாலம் நமக்கெதற்கென
எல்லோரும் என்னைக் கேட்கக்கூடும்...
குமரிக்கண்டம் என்னும் பெரும் நிலப்பரப்பில்
கடற்கோள் ஊடறத்துத் துண்டாக்கினாலும் கூட
இலங்கை - இந்தியத் தமிழ் மக்கள் எல்லோரும்
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் தானே
தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து பேண
இராமர் அணை எமக்குத் துணையென்பேன்!

சிங்களம் பேசுவோர் எண்ணிக்கையை விட
தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைவாம்
தமிழ் பேசுவோர் ஒற்றுமையை உடைத்து
சிங்களம் பேசுவோர் அடக்கியாள்வதை ஏற்று
தமிழ் பேசுவோர் ஒன்றுபட்டாலும் கூட
இந்தியத் தமிழ் மக்கள் பொங்கியெழுந்து
இராமர் அணை/ பாலம் வழியே வரலாமென
சிங்களம் பேசுவோருக்கு வயிற்றால அடிக்கவைக்க
இராமர் அணை எமக்குத் துணையென்பேன்!
இந்தியத் தமிழ் மக்களுக்கு எது வந்தாலும்
இலங்கைத் தமிழ் மக்கள் பொங்கியெழுந்து
உடனுக்குடன் உறவைப் பலப்படுத்த ஓடோடிவர
இராமர் அணை எமக்குத் துணையென்பேன்!

உலகில் முதலில் தோன்றிய மொழி
தமிழென்று முழங்கித் தான் பயனில்லை...
முதலில் உலகை ஆண்டது தமிழரென்றும்
உலகம் எங்கும் தமிழ் வாழ்ந்ததையும்
குமரிக்கண்ட வரலாறும் பாண்டியர் ஆட்சியும்
இராமர் அணை/ பாலம் தொழில்நுட்பக் கமுக்கமும்
நாம் நாளுக்கு நாள் பேசிப் பயனென்ன...
உலகம் எங்கும் ஒரு தாய் பிள்ளைகளாக
தமிழர் தம்முறவைப் பலப்படுத்தும் முயற்சியாக
மீளவும் இராமர் அணை/ பாலம் அமைத்துத் தான்
இலங்கை - இந்தியத் தமிழ் மக்கள் இணையலாமே!
இணைந்தாலும் உலகையாளப் பலமின்றிப் போகாமலே
சிங்கப்பூர் - மலேசியத் தமிழரும் இணையலாம் தான்
அப்படியே 153 நாட்டுத் தமிழரும் இணையலாம் தான்
ஈற்றில் உலகைத் தமிழர் ஆளலாம் தானே!

இராமர் பாலம் பற்றிய தகவலறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilthagaval.in/இராமர்-பாலத்தைப்-பற்றிய/


இனம் காணப் பார்!

எவரெவர்
வாய்ப்பேச்சையும் நம்ப இயலாத போது
நல்லவரையும் கெட்டவரையும்
இனம் காணக் கற்றுக்கொடுப்பார்
எவருமில்லை இங்கே!
நல்லவரையும் கெட்டவரையும்
அவரவர் நடத்தையின் படியே
எவரெவர் கண்டுபிடிக்கிறாரோ
அவரே வாழ்வில் வெற்றியடைகின்றார்!
எதிர்ப்பட்டால் - தன் தலை
அறுபடுமென அஞ்சியே
எதிரி - எப்பவும்
எம்மை மூடி மறைக்கிறான்!
எம்மை நம்பியவன்
உலகத்திற்கே எம்மை
அறிமுகம் செய்து வைக்கிறான்
நாம் - எப்போதும்
தம்மைக் காப்பாற்றுவோமென்றே!
நல்லவர் - எமது
நல்லவற்றை அறிமுகம் செய்தே
எப்போதும் நற்பெயர் ஈட்டுவார்!
கெட்டவர் - எம்மை
கெட்டவரென்றே முத்திரை குத்தி
எப்போதும் தம்மைக் கெட்டவராக்குவார்!
நாம்
நல்லவர்களை
இனம் காண முடியாது போனால்
கெட்டவர்களால்
நாம் கெட்டுப்போக வாய்ப்புண்டே!
உலகமொரு நாடக மேடையாம் - அதில்
வாழ்வோர் எல்லோரும் நடிகர்களாம்
ஆகையால்
நாம் எல்லோரும்
நல்லவரையும் கெட்டவரையும்
இனம் காணக் கற்றுக்கொண்டே
வாழ்ந்தும் ஆக வேண்டுமே!

நன்கறிந்து உறவாடு!

வானுயரப் புகழ்வதும்
தேனொழுகப் பழகுவதும்
விரும்பியே நெருங்குவதும்
நிலையறிந்து உதவுவதும்
நம் வாழ்வில் வரவேணுமே!

நிலத்தினடிவரை இகழ்வதும்
புரிந்துணர்வின்றி நெருங்குவதும்
பகைமறைத்துப் பழகுவதும்
கேடுவிதைக்கக் கைகுலுக்குவதும்
நம் வாழ்வில் வரவேணாம்!

புகழ்வதும் இகழ்வதும் இரண்டென்பர்
விரும்புவதும் வெறுப்பதும் இரண்டென்பர்
புரிந்துணர்தலும் பகைப்பதும் இரண்டென்பர்
கெட்டதை விலக்கி நல்லதை உள்வாங்கி
நல்வாழ்வில் நாமுணர்ந்து வாழ்வோமே!

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!