Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

நற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ

தூய தமிழ்  பேணும் பணி

உலகெங்கும் தூய தமிழ் பேணுவதே ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகின்றது. அதென்ன தூய தமிழ் என்கிறீர்களா? அது தான் தூய்மையான அல்லது சுத்தமான தமிழ் என்போம். அதாவது நல்ல தமிழ் அல்லது நற்றமிழ் என்போம். அப்படியென்றால் நமது புழக்கத்தில் இருப்பது கெட்ட தமிழா? ஆமாம், உண்மைத் தமிழ் அதாவது பழம் தமிழ் தன் நிலையிலிருந்து கெட்டுப் போயிருக்கிறதே! தமிழ் மொழிக்குள் பிறமொழிகள் நுழைந்து; தமிழ் மொழி தன்நிலையை இழந்திருப்பது கெட்ட தமிழுக்குச் சான்றாகும்!

தமிழா - நீ
பேசுவது தமிழா - நீயே
கொஞ்சம் எண்ணிப் பாரப்பா!
எண்ணிய எல்லாம்
எண்ணற்ற பிறமொழிகளா?
தமிழன் நாவாலே
செந்தமிழ் வெளிப்படாமைக்கு
பட படவெனப் பட்டுத் தெறிக்கும்
பிறமொழி நுழைந்த தொல்லையா?
நுனி நாவும் மேலண்ணமும்
தொட்டுக் கொள்ளாமையால் வந்த விக்கலா?
என்னவோ நடந்து போச்சு...
இனி மறந்து போவோம்
பிறமொழிச் சொல்களை!
வடசொல்களை விலக்கி வைக்கையிலே
அடி வயிற்றிலிருந்து
மூச்செடுத்து விட்டாலும் கூட
தமிழர் வாயாலே செந்தமிழே வெளிப்படும்!

அப்படியென்றால், பிறமொழிச் சொல்களை நமது தமிழில் இருந்து அகற்றி (கழட்டி) விட்டால் தூய தமிழே! அப்படி ஒன்றும் எளிதாகச் (சுகமாகச்) சொல்லிவிட முடியாது. ஏனெனில், எங்கள் இன்றைய கலப்புத் (கெட்ட) தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் நுழைந்திருப்பதோடு அவற்றை இன்றைய நம்மாளுகளால் அடையாளப்படுத்த (இனங்காண) முடியாதும் உள்ளதே!

இன்று நம்மாளுகள் தமிழென்று பேசும் கூழ்த்தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களை அகற்ற அகரமுதலிகள் (அகராதிகள்) தேவைப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் அகரமுதலிகள்(அகராதிகள்) கீழ்வரும் இணைப்பில் உள்ளது.
மேற்படி அகரமுதலிகளைப் பாவித்துத் எந்த மொழியையும் தமிழ்ப்படுத்தினாலும் அவை தூய தமிழாக அமையாது. அவற்றிலும் வடமொழி இருக்கலாம்.

முதற் தமிழ் இலக்கண நூல் என்றால் தொல்காப்பியனார் எழுதிய தொல்காப்பியம் என்றே எல்லோரும் கூறுவர். ஆனால், தொல்காப்பியனாரே தனது நூலில் ஐம்பத்தாறு இடங்களில் தனக்கு முந்தைய பலர் எழுதிய நூல்களைப் பார்த்தே தான் தனது நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளாரே! ஆகையால், முதற் தமிழ் இலக்கண நூலாக அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் இருந்திருக்கிறது. அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் இடையே பலர் இலக்கண நூல்களை எழுதியுள்ளனர். இவர்கள் காலப் பகுதியில் தான் தூய தமிழ் பேணப்பட்டிருக்கிறது எனலாம்.

தொல்காப்பியத்திலிருந்து நன்னூல் இலக்கண ஒழுங்கில் மற்றும் கோட்பாடுகளில் வேறுபட்டிருப்பதாகவே காணப்படுகிறது. அதாவது, நன்னூலர் புதிதாகச் சேர்த்த பகுதிகளை தொல்காப்பியத்துடன் ஒப்பிடுகையில் பல முரண்படுகிறது. அவரது காலப் பகுதியில் தான் வடமொழிச் சொற்கள் தமிழிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இதனாலேயே வடமொழிச் சொற்களையும் கருத்திற் கொண்டு இலக்கண மாற்றங்களைச் செய்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதனைச் சரியாக உறுதிப்படுத்தச் சான்றுகள் தேவை. தமிழில் கலந்த வடமொழிச் சொற்களை வடசொல் என்று தமிழில் பயன்படுத்தியதால், காலப் போக்கில் அவற்றைத் தமிழ் என்றே நம்மாளுகள் பாவிக்கின்றனர். எப்படியிருப்பினும் வடமொழிச் சொற்களை அதிகம் தமிழில் சேர்த்தது யாரென்று கூறமுடியாது.

பின்னர் வந்த ஆறுமுகநாவலர் தனது தமிழ் இலக்கண நூலில் வடமொழிச் சொற்களை நீக்காமல் அவற்றின் உச்சரிப்புகளை தமிழ்ப்படுத்த முயற்சித்துள்ளார் எனக் கருதமுடிகிறது. அதாவது ஜ, , , , ஸ்ரீ, ஆறாம் எழுத்து '' உம் '' உம் இணைந்த தனியெழுத்து போன்ற தமிழில் பயன்படுத்தப்படும் ஆறு வடமொழி எழுத்துக்களை நீக்கி அதற்கு ஈடான தமிழ் எழுத்துக்களைப் பாவித்து தனது முயற்சியைச் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக சந்தோஸம் என்பதை சந்தோசம் எனப் பாவித்திருக்கிறார். ஆனால் சந்தோசம் என்பதைத் தமிழ்ப்படுத்தினால் மகிழ்ச்சி என்றே வருகிறது.

ஆகப் பிந்திய அறிஞர்கள் வடசொல், வடஎழுத்து உச்சரிப்புகளை நீக்க முயற்சித்துள்ளனர். வடமொழிச் சொற்களுக்கான தூயதமிழ் சொல் அகரமுதலியைத் தந்து, வடசொல்லோ வடஎழுத்தோ தமிழில் சேர்க்க வேண்டாம் எனத் தூயதமிழ் பேண வழிகாட்டியும் உள்ளனர். அவ்வாறான அகரமுதலிகளை எமது மின்னூல் களஞ்சியத்தில் பார்வையிடலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு தமிழிலில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட பிற மொழிச் சொற்கைகளை அகற்றினால் போதுமெனச் சிலர் கூறலாம். ஆனால், முதலில் தமிழிலிருந்து ஆங்கிலம், போத்துக்கீச, ஒல்லாந்தர் மொழிகளோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைக் கழட்டினாலும் வடமொழியைக் கழட்டுவது இலகுவானதாக இருக்காது. அதாவது, பிற மொழி (எ.கா.- வடமொழி) எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களைப் பாவித்துப் பேசப்படும் சொற்களையும் அகற்றவும் வேண்டும்.
எ.கா.-
விஷயம் - வடமொழி.
விடயம் - போலித் தமிழ்.
பற்றியது - தூய தமிழ்.

கூடியவரை தொல்காப்பியனார் காலத்து தமிழ் இலக்கணத்தைப் பொருட்படுத்தினால் (புழக்கத்திற்கு வந்த வடமொழிப் பாவனைக்கான இலக்கணத்தை நீக்கி) தூய தமிழைப் பேணலாம். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்று தமிழில் இல்லாத எழுத்துக்களையோ சொற்களையோ பாவிப்போமானால் உலகமெங்கும் தூய தமிழைப் பேண இயலாது போய்விடும்.

உண்மையில் இல், எள், கல் என்று ஏதாவது ஒரு முதற்(வேர்ச்) சொல்லிலிருந்து தான் தமிழ் சொல் அமைந்திருக்கும். தமிழ் சொல் உச்சரிப்பில் எந்தவொரு வடமொழி எழுத்தோ(வடமொழி எழுத்துப் பாவிக்கும் சொல் வடசொல் ஆகும்) பிறமொழி எழுத்தோ உள்வாங்கப்பட்டிருப்பின் அவை தமிழ் சொல் அல்ல. அவற்றைப் பயன்படுத்தினால் தூய தமிழாக அமையாது.

எழுதும் போது கூட பிறமொழிச் சொல்லுக்கான தமிழ் சொல்லைப் பயன்படுத்தித் தூயதமிழைப் பேண முன்வாருங்கள். தூயதமிழை இயல்புக்குக் கொண்டு வரும் வரை தூயதமிழ்ச் சொல்லை அடுத்து அடைப்பிட்டு அதற்குள்ளே பிறமொழிச் சொல்லையும் பேணவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக கடுமை(சீரியஸ்), வேடிக்கையாக(தமாஷாக) என எழுதலாம். காலப்போக்கில் அடைப்புக்குள் இடப்படும் பிறமொழிச் சொல் பாவனையை நிறுத்தலாம். அடுத்து, நம்மாளுகள் நமது பிள்ளைகளுக்குத் தூயதமிழில் பெயரையும் வைக்கவேண்டும்.

ஈரேழு தீவுகளைக் கொண்ட ஈழத்திலே யாழ்ப்பாடி வாழ்ந்த யாழ்ப்பாணத்திலே வேளான் நிலபுலமும் முரல் மற்றும் தேறை மீன் சிறப்பாக வலையில் படும் கடல்வளமும் நிறைந்த மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்குப் பிறந்த மூத்த மகனே ஜீவலிங்கம் ஆவார். அவர் வேறுயாருமில்லை நான் தான் உங்கள் யாழ்பாவாணன்.

தமிழறிஞர்கள் 'ஜீவலிங்கம்' என்ற பெயரைக் உலகின் பெரிய கெட்ட பெயர் என்றே கூறுவர். வடமொழிப் பெயரென்பதால் அல்ல. அதாவது, ஜீவன்+லிங்கம் என்று பகுத்த பின்னர் தமிழ்ப்படுத்திப் பாருங்கள். ஜீவன் என்றால் உயிரன் என்று பொருள்படும். லிங்கம் என்றால் காமம் அல்லது காமத்துடன் தொடர்புடையது என்று பொருள்படும். அதனாலேயே 'ஜீவலிங்கம்' என்பது கெட்ட பெயர் என்று கூறமுடிகிறது. காமம் என்றால் அழகு என்று கூறலாமென பாவரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். எனவே, 'ஜீவலிங்கம்' என்ற பெயரைத் தமிழ்ப்படுத்தினால் உயிரழகன் என்றே அமையும்.

ஆயினும், எனது புனை பெயரை யாழ்பாவாணன் என்றே வைத்துள்ளேன். யாழ்பா+வாணன்(வாழ்பவன்/வசிப்பவன்) என்றால் யாழ்பாணத்தில் வாழ்பவர் என்றும் யாழ்+பாவாணன்(பாவலன்/கவிஞன்) என்றால் யாழ்பாணத்துப் பாவலன் என்றும் பொருள் தரக்கூடியதாகப் பெயர் வைத்துள்ளேன்.

எனது உறவுகளே,  தமிழ்ப் பெயரை உங்கள் புனைபெயராக்குவதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரையே வையுங்கள். தூய தமிழ்ப் பெயர்க் கையேடுகள் எமது மின்நூல் களஞ்சியத்திலும் திரட்டி வைக்கப்பட்டுள்ளது. நல்ல தமிழ்ப் பெயர் நூல்கள் இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து பல வெளிவந்துள்ளது. உலகின் எப்பகுதியில் இருந்தும் அதனைப் பெற்று எல்லோரும் தமிழ்ப் பெயர் சூட்ட முன்வாருங்கள். எவரும் பெயரைக் கேட்டால், எங்கள் பெயர் 'தமிழ்ப் பெயர்' என்று அதிரவேண்டுமே!

உலகத் தமிழ் உறவுகளே! மேலே உள்ளவற்றைப் படித்தால் உலகெங்கும் தூய தமிழ் பேணுவதென்பது இயலாத ஒன்று என புரிந்துகொள்ள முடியும். தொடக்கத்தில் "டேய் யாழ்பாவாணா, உதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று எனது நண்பர்கள் என்னைத் திட்டியும் உள்ளனர். ஆமாம், உலகெங்கும் தூய தமிழ் பேணுவதென்பது சிக்கலான பணிதான். எனவே தான் தூய தமிழ் பேண உங்கள் ஒவ்வொருவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறேன்.

வாருங்கள்
உலகத் தமிழ் உறவுகளே!
ஒன்றாய்ச் சேருங்களேன்!
உலகெங்கும்
தூய தமிழைப் பரப்புவோம்!
உலகெங்கும்
தூய தமிழைப் பேணுவோம்!
வாருங்கள்
உலகத் தமிழ் உறவுகளே!
நாம் ஒன்றுபட்டால்
உலகெங்கும் தூய தமிழ் ஒலிக்குமே!