Translate Tamil to any languages.

Saturday, 4 April 2020

பயன்மிகு ஒருங்குகுறியும் (Unicode) குரல் வழித் தட்டச்சும் (Voice to Typing)

2020 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் என்றோர்க்கு covid-19 கொரோனா வைரஸ் வந்து இறப்புகளை விதைக்கும் என்றெவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் வீட்டிற்குள்ளே இருப்பது covid-19 கொரோனா வைரஸ் எம்மைத் தாக்காது பாதுகாக்கவே! பாதுகாப்பாக வீட்டில் இருப்போர் ஆக்கபூர்வமான பொழுதுபோக்கை மேற்கொண்டால் உளநெருக்கடியைத் தவிர்க்கலாம். பத்திரிகை படிப்பதோடு நின்றுவிடாமல் படைப்புகளை ஆக்கலாம்; ஊடகங்களுக்கு அனுப்பி வெளியிட்டு வைக்கலாம்; வலைப் பக்கங்களில் வெளியிடலாம்; உள நிறைவைப் பெறலாம்.

வலை ஊடகங்கள் - முதற் பகுதி
வலை ஊடகங்கள் - இரண்டாம் பகுதி

வலை ஊடகங்கள் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு ஒளியும் ஒலியும் (வீடியோ) வெளியிட்டுள்ளேன். அதனைப் பார்த்த பின் புதியவர்களும் வலைப்பக்கம் வந்திணையலாம். அவர்களுக்காக இந்தப் பதிவு. இருப்பினும் நாம் இவற்றைக் காண்பித்துப் புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவோம். பழைய வலைப்பதிவர்களையும் மீள இயங்க வைப்போம். 2021 இலாவது வலைப்பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம்.

ஒருங்குகுறியைக் (Unicode) கையாளத் தெரிந்துகொள்வதனால் வலை ஊடகங்களைக் கையாள்வது இலகுவாகும். நான் NHM converter, Tamil99 Keyboard பாவிக்கிறேன். எவ்வாறு ஒருங்குகுறியைக் (Unicode) கையாளலாம் என்பதைக் கீழுள்ள ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.நான் ஒருங்குகுறி (Unicode) பற்றிய ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர்ந்த போது, எனக்குக் கிடைத்த இணைப்பு இது. நான் சுட்டிக்காட்டிய தளங்களை விட, இத்தளம் சிறப்பு எனப் பலரும் சொல்ல இடமுண்டு. ஆம்! அதாவது விரைவாக (வேகமாக) இயங்குவதே சிறப்பு. மேலும் அதிக எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. இதனை வலைப்பதிவர்கள், விக்கிப்பீடியர்கள், மென்பொருள் ஆக்குநர்கள் (SW Developers) யாவரும் அறிந்த  நீச்சல்காரன் அவர்களே தயாரித்துள்ளார்.

"நான் சொல்வதெல்லாம் நடைபேசி / கணினி தட்டச்சுச் செய்வதனால் எனக்குத் தட்டச்சுச் செய்கின்ற வேலையே கிடையாது." என எத்தனையோ அறிஞர்கள் சொல்லும் தொழில்நுட்பத்தை நானும் கீழ்வரும் ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.நான் குரல் மூலம் தட்டச்சுச் செய்யலாம் என ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர முன்னரே உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் நன்கறிந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அறிமுகம் செய்துவிட்டார். திருக்குறளுடன் திரைப்பாடலுடன் உள்ளத்தில் அமைதியை வரவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவரது பதிவையும் படித்துப் பயன்பெறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


பதிவர்களாகிய நாம் covid-19 கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் பகிர்ந்து எல்லோரையும் காப்பாற்ற முயல்வோம்.

Tuesday, 31 March 2020

துயர் தரும் கொரோனாவும் தொல்லை தரும் வதந்திகளும்


கொரானாவால் ஒருவர் சாவு! - எனக்கு
நடைபேசியில் செய்தி வந்தது! - அதில்
உண்மை ஏதுமில்லையென - அந்த
வதந்தியை ??ந்தி பரப்பியதாய் தகவல்!
சாவடைந்ததாகச் சொல்லப்பட்டவர்
உயிரோடு இருப்பதாகவும் - தனக்கு
கொரானா இல்லையென்றும் - அவரே
இணையத்தில் உரிமை கோருகிறாரே!

மதுபானம் குடித்தால் கொரானா தொற்றாதென, பலர் மதுபானம் குடித்துச சாவடைந்ததாகத் தகவல் ஒன்று நடைபேசியில் வந்தது! இவ்வாறான வதந்திகளைப் பரப்பாமல் கொரானா தொற்றாமல் இருக்கப் பாதுகாப்புத் தேடுவதே நல்வழி.

எந்தவொரு நோய்க்கும் மதுபானம் மருந்தாக மாட்டாது. மருந்துக்குக் குடிப்பதாகச் சொல்லி செத்தவர்கள் அதிகம். இந்த ஒளியும் ஒலியும் (வீடியோ) இல் "மதுபானம் குடிக்காதீங்க, அதனைக் குடித்தால் விளைவு என்ன?" என்பதை நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது.கொரோனா பரவாமல் வீட்டில் இருங்கள்

வருது வருது கொரோனா வருது
விலகு விலகு கொரோனா போகும்
                                                                          (வருது)     
ஒதுங்கு ஒதுங்கு கொரோனா விலகும்
முடங்கு முடங்கு கொரோனா சாகும்
                                                                         (ஒதுங்கு)
வீட்டில தான் இருக்கலாம் தான்
ஏட்டைத் தான் படிக்கலாம் தான்
மூக்கு முட்ட உண்ணலாம் தான்
நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் தான்
கொரோனா வராமல் தடுக்கலாம் தான்
                                                                         (வருது)
                                                                        (ஒதுங்கு)
வீட்டில கிடந்து உருளலாம் தான்
நாட்டு நடப்பை இணையத்தில தான்
பார்த்துப் பார்த்து அறியலாம் தான்
சேர்த்துத் சேர்த்து அறிவைத் தான்
உலகறிய இணையத்தில பரப்பலாம் தான்
கொரோனா வராமல் தடுக்கலாம் தான்
                                                                                       (வருது)
                                                                                       (ஒதுங்கு)
வீட்டிலேயே இருந்திட்டால் கொரோனா தான்
எட்டிப் பார்க்க இடமில்லைக் காண்
நாட்டிலேயே பரவாமல் கொரோனாவைத் தான்
காற்றிலேயே சாகவைத்து உதவலாம் தான்
கொரோனாவை விரட்டுவோர் மக்கள் தானே
                                                                                       (வருது)
                                                                                       (ஒதுங்கு)

உலகை உறுத்தும் கொரோனா தான்
வீதிக்கு வந்தால் உயிர் குடிப்பேனென
வீட்டுக்குள்ள இருக்கவைத்து அழகு பார்க்குதே!
நம்மாளுங்க தெருவில இறங்கி
கொரோனாவைப் பிடிப்பேனெனச் சாகிறாங்க...
வீட்டிற்குள்ள முடங்கியவர் தப்பினரே!

வலை ஊடகங்கள் பற்றிய ஒளியும் ஒலியும் (வீடியோ) இரண்டாம் பகுதியில் வலை ஊடகங்களை எவ்வாறு கவனமாகக் கையாள்வது பற்றி வெளிப்படுத்தி உள்ளேன். அதனை ஒன்பது மணித்துளி (9 Minutes) நேரம் பொறுமையாகப் பாருங்கள். அதனைத் திறனாய்வு செய்யுங்கள். குறை, நிறைகளைப் பகிருங்கள். சிறப்பாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.


Friday, 27 March 2020

கொரோனாவும் தனிமைப்படுத்தலும் தொடருதே!

கொரோனா தொற்றுப் பரவாதிருக்க, வீடுகளுக்குள்ளே தனிமைப்பட்டு இருத்தலை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எத்தனை நாளுக்கு வீடுகளுக்குள்ளே முடங்கி இருப்பது? அத்தனை நாள்களையும் முகம் கொடுப்பதே பெரிய சிக்கல். அதில் பொழுதுபோக்கு என்பது உளநலத்தைப் பாதிக்கச் செய்யலாம். பயனுள்ள வழிகளில் பொழுதுபோக்கு அமைந்தால் உளநலம் பேணமுடியும்.

கொரோனாவும் தனிமைப்படுத்தலும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். வலை ஊடகங்களைப் பயன்படுத்தியும் பொழுதுபோக்க முடியும் என்பதை ஓர் ஒளியும் ஒலியும் (வீடியோ) தொகுப்பு ஊடாக வெளிக்கொணர முயன்றுள்ளேன். அரை மணி நேரம் பொறுமையாகப் பாருங்கள். அதனைத் திறனாய்வு செய்யுங்கள். குறை, நிறைகளைப் பகிருங்கள். சிறப்பாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
(இணைப்பு: https://youtu.be/evzZesFjQU4)Sunday, 22 March 2020

கொரோனாவை விட்டுவிலகி நலமோடு வாழ்வோம்.

வலை வழியே கண்ணுற்ற தகவலை ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவாகப் பகிர முனைந்துள்ளேன். கீழே எனது ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பாக்களும் விளக்கமும் பதிவு செய்துள்ளேன்.

 

கேடான உணவை விட்டிட்டு வாழப்பார்!


கண்ட உணவுகளும் உண்டு களிக்கலாம்
உண்ட உணவுகளால் நோய்களும் - அண்டவே
கண்ட உணவுந்தான் கேடு!

மருத்துவத் தன்மை இருக்கும் உணவை
விருப்புடன் உண்டுதான் என்றும் - மருந்தை
ஒருபோதும் நாடாது வாழு!


இயற்கை உணவுகளில் நாட்டம் கொள்ளாது, செயற்கைச் சுவையூட்டி உணவுகளை உண்டுகளித்து நோய்களைத் தேடும் உறவுகளே! மருத்துவக் குணமுள்ள இயற்கை உணவுகளில் நாட்டம் கொண்டால் நீடூழி வாழ  வாய்ப்புண்டாம். நீடூழி வாழ்ந்தவர்கள் தம் உடற்பயிற்சியாலும் இயற்கை உணவாலும் தாம் நீடூழி வாழ்ந்ததாகச் சொல்கிறார்களே!

இடமாற்றமும் உளமாற்றமே!
மறக்க முடியல புண்பட்ட உள்ளம்
மறக்க மருந்துமே இல்லை - மறக்க
சிறந்த இடமெங்கே நாடு!

சிறந்த மருந்தாம் மறப்பதற்கு உண்டு
சிறந்த இடத்தில் பழசும் - மறக்க
சிறப்பாய் புதியதை நாடு!

சில இடங்களில், சில சூழ்நிலையில் சிலரது உள்ளம் நோகக்கூடும். பழைய புண்ணில் குத்தினால் வலிப்பது போல அவர்கள் துன்பத்திற்கு உள்ளாகலாம். அவ்வாறானவர்கள் புதிய இடத்தை, புதிய சூழலைத் தெரிவு செய்வதன் மூலம் அமைதியை நாடலாம். பழசுகளைக் கிழறாத இடமோ சூழலோ தான் உள்ளத்தில் அமைதியைத் தோற்றுவிக்கும்.


விழிப்புணர்வும் அறுவடையும்


விழிப்படைய வைக்கத்தான் நல்வழியைச் சொல்ல
விழித்தெழ வேண்டியவர் யார்தான் - விழித்து
எழுந்துமாற் றம்கண்டார் காண்.

விழித்தெழுந்து மாற்றம் மலர்ந்திடக் காண்பார்
விழித்தெழ நல்வழிதான் காட்டின் - விழித்தே
முழுவூரும் மேம்படக் கண்டு.

நம்மவர் பலர், "பிறர் நமக்கேன் அறிவுரை சொல்ல வேண்டும்." என நினைப்பதனால் 2020 இல் தலைகாட்டிய COVID-19 (கொரோனா) வைரல் தொற்றுக்கு உள்ளாகினர். "முற்காப்பு எடுத்து இருந்தால் COVID-19 (கொரோனா) வைரல் தொற்று ஏற்பட்டிருக்காது" என வந்த பின் நொந்து பயனில்லையே! எவரும் (பெரியவரோ சிறியவரோ ஆணோ பெண்ணோ) வழிகாட்டலாம், நாம் நன்மை அடைவதற்கே எனச் சிந்தித்துச் செயலாற்றியவரே பயனடைவர்.

Sunday, 15 March 2020

கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!

கத்திரியும் காண்டாவனமும்  கொல்லுமாமே!

கொரோனா கொரோனா  -  நீ
எங்கே பிறந்தாய்  -  நீ
எப்படிப் பிறந்தாய் - நீ
காற்றில பரவி உலகில
ஆள்களை கொல்லுறியாமே!
அமெரிக்காவை அழிக்கவா? -  உன்னை
சீனாவா உருவாக்கியது?  -  அந்த
சீனாவுக்குத் தெரியாதா?  -  நீ
உலக மக்களை அழிக்கவே
உருவெடுத்தாய் என்று! 
கொரோனா கொரோனா  -  நீ
தமிழகம் வந்தால்  -  உன்னை
கத்திரி வெயில் கொல்லுமாமே!
கொரோனா கொரோனா  -  நீ
யாழ்ப்பாணம் வந்தால்  -  உன்னை
காண்டாவன வெயில் கொல்லுமாமே!
கொரோனா கொரோனா  -  நீ
கொழும்புக்கு வந்தால்  -  உன்னை
புலிகளையே அழித்து ஒழித்த
சிங்களப் படையே கொல்லுமாமே!
காற்றிலும் மாற்று வழியிலும்
பரவிய கொரோனாவின் ஆயுளை
கடும் வெயில் குறைத்தாலும்
நமது உடலுக்குள் ஊடுருவ விடாது
நாமே முற்காப்பு எடுக்க வேணுமே!

முகநூலில் பொறுக்கியது
1.நிலவேம்பு (Green Chiretta),    2.பற்படகம் (Fumaria indica),
3.கீழாநெல்லி (Gale of the wind),     4.பிரண்டை (Veld grap),
5.நாயுருவி வேர் (Achyranthes aspera),
6.ஆடாதோடை (Malabar nut),    7.கற்றாழை,  
8.கொய்யா இலை,    9.நெல்லி இலை
10.இஞ்சி,    11.வெள்ளைப்பூண்டு.

ஆகியவற்றை ஒரு கைபிடி வீதம் அளவில் எடுத்து 1000ml நீரில் கொதிக்க வைத்து, சூடு ஆறியதும் 'தேன்' உடன் கலந்து சாப்பாட்டிற்கு முன் ஒரு டம்ளர் (சிறிய) அளவு மூன்று வேளை குடிக்கவும்.
"பழங்காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் வைரஸினை எதிர்ப்பதற்கான சித்த மருந்து!" என நண்பர் S.Vinoj Kumar முகநூலில் பகிர்ந்ததை நானுமிங்கு பகிருகிறேன்.

குறிப்பு: நகைச்சுவையாக எவரும் இருந்துவிடாமல் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க முற்காப்பு எடுத்து வாழ முயல்வோம்!


எனது நூல் வெளியீடு
எனது "யாழ்பாவாணன் கவிதைகள்" நூலை இலங்கை, யாழ்ப்பாணம், மாதகல் ஊரில் நான் படித்த பாடசாலையில் வைத்து 2020 மே 08 வெள்ளி வெளியிடவுள்ளேன். இந்நூலுருவாக்கப் பணிகளை இந்திய-தமிழ்நாடு, திருச்சி, இனிய நந்தவனம் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவுள்ள தமிழக அறிஞர்கள், நந்தவனம் சந்திரசேகரன் (நடைபேசி: +91 94432 84823) அவர்களுடன் தொடர்புகொண்டு இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.


மேலும், இந்நூலுக்கான அறிமுக விழாவினை 2020 ஜூலை இல் தமிழ்நாட்டில் நடாத்த எண்ணியுள்ளேன். அவ்வேளை வலைப்பதிவர்களைச் சந்திக்கவும் எண்ணியுள்ளேன். வலைப்பதிவர்கள் எல்லோரும் சந்திக்கத் தகுந்த பொது இடம் ஒன்றினைத் தெரிவு செய்து பின்னூட்டத்தில் தாருங்கள்