Translate Tamil to any languages.

Thursday, 31 December 2015

என் முதல் மின்நூலில் புதிதாய் நுழைந்தவை

புதிய ஆண்டில் புதிய நல்ல எண்ணங்களுடன் தங்கள் புதிய பயணம் வெற்றி பெற எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
2014 sept இல் 'எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்' என்ற மின்நூலை 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' ஊடாக வெளியிட்டிருந்தேன். அது எனது முதல் முயற்சி. அதிலும் குறைகள் காணப்பட்டன. அக்குறைகளைச் சற்று நீக்கி எனது முதலாவது மின்நூலை மேம்படுத்தி உள்ளேன். அவ்வேளை சில புதிய எண்ணங்களை அம்மின்நூலில் நுழைத்திருந்தேன். அவற்றைக் கீழே காண்க.

வீட்டுக்கு வீடு

பணம் உள்ள வரை தான்
உறவுகள் ஒட்டி உறவாடும்!
---

செய் + தீ = செய்தி

காற்றோடு பரவும் தீயைப் போல மக்களிடையே பரவும் தகவல்.
---

நடைபேசி

எங்கேயும் எவரைப் பார்த்தாலும்
நடைபேசியும் கையுமாக நடைபோடுவர்
"விடைபெற்றது வேறுபாடு!"
---

விளங்குகிறதா?

ஆசிரியர்: நடுச் சென்ரர் என்றால் என்னவென்று விளங்குகிறதா?

மாணவர்: ஆங்கிலத்தில 'Center' தான்; தமிழில 'நடு' என்று விளங்காதா?
---

வேறுபாடு

உண்மை கனமானது; பறக்காது பரவும்
பொய் கனமற்றது; பறக்கும் பரவாது
---

என் அம்மா சொல்கிறார்!

பெண் பிள்ளை என்றாலும் அக்கம் பக்கம் அறியாதவாறு இருக்கணும்.
---

பார்வை பிழை

ஆனா: வரும் வாலைகளில் ஒல்லி எனக்கு; குண்டு உனக்கு.

ஆவன்னா: ஒல்லி தான்டா அம்மா; குண்டு தான்டா மகள்!

ஈனா: இன்றைய காளைகளுக்கு கண்ணில பிழையோ!
---

தங்கியிருத்தல்

பகலவன் இல்லையென்றால் நிலவவள் ஒளி வீசுவாளா!
---

முக்கிய தேவை

சட்டென்று முடிவு எடுப்பதை விட
பட்டென்று விளைவை எண்ணிப் பார்!
 ---

எனது முதலாவது மின்நூல் பற்றிய தகவலறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

விரைவில் எனது 'யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01' என்ற இரண்டாவது மின்நூலை வெளியிடவுள்ளேன்.


Friday, 25 December 2015

2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நடாத்துவதாக 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் அறிவித்திருக்கிறது. "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்பது அப்போட்டியின் தலைப்பு. 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்றும் 'ஊற்று' குழுவினர் தெரிவித்துள்ளனர். பதிவர்கள் எல்லோரும் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அதற்குப் பின்னூக்கமாகப் பாப்புனைய விரும்பவைக்கலாம் என இப்பதிவைத் தர முயன்று பார்க்கிறேன்.

சரி! இப்போட்டியின் தலைப்புப் பற்றி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் குறித்து இத்தலைப்பை இட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். எல்லாம் தெரிந்த பின்னும் பா/கவிதை புனைந்து போட்டியில் பங்கெடுக்கப் பின்னடிப்பது நல்லதல்ல.

வெறுமனே தலைப்பைத் தந்திருந்தால் பா/கவிதை புனைவதென்பது சற்றுச் சிக்கல் தான். தலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே! ஆயினும் போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றேன். இனியாவது உங்களால் பா/கவிதை புனைய முடியாதா? எடுத்துக்காட்டுக்காக 'செருப்படி' என்ற தலைப்பில் பா/கவிதை புனைந்து பார்க்கலாம் வாங்க!

"கண்டேன் கண்ணகி ஒருத்தியை
கண்ணில் நுழைந்தவள் - என்
உள்ளத்தில் குந்தியிருக்க - அவளை
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தான் பிள்ளைகுட்டிக்காரி' என்று
தருவாளே செருப்படி!" என்றவாறு
தலைப்பை மட்டும் கருத்தில் கொண்டோர் பா/கவிதை புனைய முயலலாம்.

"முத்துப்பல் சிரிப்பு அழகி
எந்தன் முன்னே நெருங்க
உந்தும் உள்ளத்து உணர்வால்
நெருங்கி வந்தவளை நோக்கி
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தன் கணவனைக் காதலிப்பதாய்' கூறி
கன்னம் (சொத்தை) கிழிந்து செந்நீர் (குருதி/ இரத்தம்) வடிய
குதிக்கால் பாதணியால் கொடுத்தாளே
'எவளையும் விரும்பாதே!' எனச் செருப்படி!" என்றவாறு
பட்டறிவை (சூழலை/அனுபவத்தை) வைத்து பா/கவிதை புனைய முயலலாம்.

இந்த எடுத்துக்காட்டில் 'இப்படியும் நிகழலாம்' என முதலாவதும் 'இப்படி நிகழ்ந்தது' என இரண்டாவதிலும் வெளிக்கொணர முயன்றிருப்பதைக் காணலாம். அப்படியாயின் "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்ற தலைப்பில் எப்படி பா/கவிதை புனைந்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் 2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அனுப்பவுள்ளீர்கள்?

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா? அப்படி ஒருபோதும் இருக்காதே!

கருங்கல்லைத் துளைத்தேனும் அதற்கப்பால்
என்ன, எப்படி என்றவாறு
புனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்
பாவலர்/கவிஞர் என்பவரின் உள்ளத்தில்
இயல்பாகத் தோன்றும் என்றால்
நம்மால் முடியாதென இருக்கலாமோ?
கண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே
கண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே
உண்மையில் பாப்புனைய விரும்பும்
உம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே!
உலகெங்கும் உடனுக்குடன் உறுமிய
ஊடகங்களின் தகவலை வைத்தே
ஒரு முறை உண்மை நிகழ்வை
உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே
உங்களைப் பாதிப்புக்கு உள்ளானவராக
எண்ணிக் கொண்டே - எதிரே
உதவிக்கு வந்த உண்மைக் கைகளை
அவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)
பாவாக/ கவிதையாக புனைய இயலுமே!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் எல்லோரும் பங்கெடுக்கலாம்; 'வாருங்கள்! வாருங்கள்!' என எல்லோரையும் அன்போடு அழைக்கின்றேன். கீழுள்ள இணைப்பையோ படத்தையோ சொடுக்கிப் போட்டி பற்றிய முழு விரிப்பையும் படித்த பின் போட்டியில் பங்கெடுக்கலாம் வாருங்கள்!
நீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள்! கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.

<a href="http://ootru1.blogspot.com/2015/12/2016.html" target="_blank"> <img border="0" height="240" src="//2.bp.blogspot.com/-7ijbsupmI_0/Vns7pM26ysI/AAAAAAAAADg/KSxD_vAqYZM/s640/Untitled-1%2Bcopy.jpg" width="200"> </a> உங்கள் தேவைக்கு ஏற்ப width="200" height="240" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.

Wednesday, 23 December 2015

மலேசியப் படைப்பாளிகளை இலங்கைப் படைப்பாளிகள் வரவேற்றனர்.


மலேசியாவில் வாழும் இலக்கியப் படைப்பாளிகள் தம்மோடு உலகெங்கிலும் உள்ள தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் வாழும் நாடுகளிற்கு 30 - 40  வரையான படைப்பாளிகளுடன் பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் 36 மலேசியப் படைப்பாளிகளுடன் இலங்கைக்கு வந்ததாக அந்தக் குழுவின் தலைவர் திரு.பெ.இராசேந்திரன் ஜயா அவர்கள் இலங்கை திருகோணமலையில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார்.

இலங்கையில் திருகோணமலை, கிறின் வீதி, சன் சைன் நிறுவன (விடுதியில்) அரங்கில் (மண்டபத்தில்) 15/12/2015 செவ்வாய் மாலை நான்கு மணிக்கு இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைப் படைப்பாளிகள் மலேசியப் படைப்பாளிகளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மலேசியப் படைப்பாளிகள் குழுத் தலைவர் திரு.இராசேந்திரன் மற்றும் அவருடன் வருகை தந்த திருமதி.சுடர்மதி அம்மா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை இலங்கைத் தடாகம் கலை இலக்கிய வட்டம் தலைமையேற்றுப் பொறுப்புடன் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும் தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைப்பும் இணைந்து படைப்பாளிகளுக்கு மதிப்பளிப்பு நிகழ்வையும் நடாத்தினர். இந்நிகழ்வில் நான், 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் உட்பட 40 இற்கு மேற்பட்ட இலங்கை மற்றும் மலேசிய மூத்த படைப்பாளிகள், இளைய படைப்பாளிகள் என மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வினைத் தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளரான கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவர் மதிப்புரை நிகழ்த்தும் போது மலேசியப் படைப்பாளிகள் இலங்கை வருவதை உறுதிப்படுத்தியதோடு இந்நிகழ்விற்கான நினைவுப் பரிசில், சான்றிதழ்களை மலேசியாவில் தயாரித்து திரு.ரூபன் ('ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர்) அவர்கள் அனுப்பி வைத்ததாகவும் அவரது உதவிகளைத் தான் ஒரு போதும் மறக்க இயலாது என்றும் கூறினார். மேலும் மலேசிய எழுத்தாளர்களுக்கான இரவு விருந்தினைக் கனடா படைப்பாளி உலகம் அமைப்புத் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் பொறுப்பேற்றதாகவும் அவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வை ஒழுங்காக ஏற்பாடு செய்து சிறப்புற நிகழ்த்திய 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பின் மேலாளரான பெருமதிப்புக்குரிய கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் பல துறை ஆற்றல் மிக்க அறிஞர். முப்பது ஆண்டுகளாகத் 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' அமைப்பை நடாத்தி இலக்கியப் பணி ஆற்றியமையை மதிப்பளித்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஊடாக அதன் தலைவர் ரூபன் (தம்பிராசா தவரூபன்) மலேசியாவிலிருந்து அனுப்பி வைத்த 'தமிழ்மாமணி' நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கி, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது.

இப்படியெல்லாம் இலங்கையில் நிகழ்ந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வைச் சுருக்கிச் சொல்லி முடிக்க முடியாது. இந்நிகழ்வினூடாக இலங்கை - மலேசியப் படைப்பாளிகள் கருத்துப் பரிமாறல், வரவேற்பு, விருந்தோம்பல் யாவும் இருசாராருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தப் பலப்படுத்த உதவுமென என நம்புவோம். அதே வேளை இவ்வாறான நல்லுறவின் ஊடாக உலகம் எங்கும் நற்றமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழர் பண்பாட்டைப் பேண முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தி!

நிகழ்வில் கலந்து கொண்டவர் என்ற வகையில் நிகழ்விற்கு வருகை தந்தவர்களின் பேச்சில் இருந்து பொறுக்கிய தகவலைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் பரிசில் வழங்கி உலகத் தமிழ் எழுத்தாளர்களை மதிப்பளிக்கிறது என அந்தக் குழுவின் தலைவர் திரு.பெ.இராசேந்திரன் ஜயா அவர்கள் சொன்னதும் அச்செயலை நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோரும் பாராட்டினர். உலகெங்கும் வாழும் தமிழர் எல்லோரும் அவர்களைப் பராட்டாமல் இருக்க முடியாது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் ஊடாக முப்பது ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றுவதோடு படைப்பாளிகளை மதிப்பளித்து ஊக்குவிக்கும் உயரிய பணியைச் செய்து வரும் கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்களை அறிஞர்கள் பலர் பாராட்டினர்.

கனடா படைப்பாளி உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்திய நோக்கமே ஈழத்துப் படைப்பாளிகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தவென அதன் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் தெரிவித்தார். அதற்காகத் தாம் உழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய வன்னியூர் செந்தூரன் அவர்கள் தனது செந்தணல் வெளியீட்டகம் ஊடாக ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை நூலுருவாக்க உதவுவதாகச் சொன்னார்.

வசதியற்ற படைப்பாளிகளுக்கு உதவுவதே தமது அடுத்த இலக்கென தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் தெரிவித்தார். அதற்குக் கனடா படைப்பாளி உலகம் உதவும் என்றும் தெரிவித்தார்.

ஈற்றில் இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகள் தம்மை; இலங்கைப் படைப்பாளிகள் சிறப்பாக வரவேற்று மதிப்பளித்தனர் எனப் பாராட்டினர். ஆக மொத்தத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தமிழை வாழ வைக்கும், தமிழை வாழ வைப்போரை ஊக்கப்படுத்தும். இவ்வாறான நிகழ்வுகள் உலகெங்கிலும் இடம்பெற வேண்டும் என்பதே எனது எண்ணம்.

Friday, 18 December 2015

அன்று 'கவிமுரசு' இன்று 'கலைத்தீபம்' எனக்குக் கிடைத்ததே!

அன்று 'கவிமுரசு'

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக 402 கவிஞர்களின் "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் எனது கவிதையும் இடம் பிடித்தது. அதற்காக 16/06/2013 அன்று அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்ட வேளை 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவிமுரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர்.


அந்நாள் காசி.ஜீவலிங்கம்/யாழ்பாவாணன் ஆகிய எனக்கு அந்த "கவிமுரசு" பட்டயம் கிடைத்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஏனெனில், என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த முதல் மதிப்பளிப்பு "கவிமுரசு" என்பேன். அதனை வழங்கிய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தினருக்கு நன்றி.

இன்று 'கலைத்தீபம்'

உலகெங்கும் தமிழ் இலக்கிய உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் சுற்றுலாச் சென்று வரும் மலேசியப் படைப்பாளிகள் இலங்கை வந்திருந்த வேளை; 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' முயற்சியில் 15/12/2015 அன்று இலங்கை, திருகோணமலை நகர், கிறீன் வீதி, சண் சைன் நிறுவன (கொட்டல்) அரங்கில் (மண்டபத்தில்) இலக்கியச் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.

15/12/2015 அன்று 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' நடாத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பும் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து எனது இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி 'கலைத்தீபம்' என்ற விருதினை 15/12/2015 அன்று வழங்கி மதிப்பளித்து இருந்தனர். இதற்கு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் பங்களிப்பும் இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.எனக்குக் 'கலைத்தீபம்' என்ற விருதினை வழங்கிய தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பு, கனடா படைப்பாளி உலகம் அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோருக்கு நன்றி.

இந்நிலையில் எனது வலைப்பணிகளாக...
உளநல மதியுரையும் வழிகாட்டலும்
ஊடகத்துறை அறிவூட்டலும் படைப்பாளிகளை ஊக்குவித்தலும்
தொழில்நுட்பப் பகிர்வும் தமிழ் மென்பொருள் வெளியீடும்
உலகெங்கும் தூய தமிழ் பேண வழிகாட்டுதலும்
மேலும், நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மின்நூல்களை இணையவழியில் திரட்டிப் பகிர்தல்
ஆகிய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.


சின்னப்பொடியனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி மதிப்பளித்தோருக்கும் உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கியோருக்கும் நன்றி கூறுவதோடு எனது வலைப்பணிகளைத் தொடரத் தங்கள் ஆதரவையும் நாடி நிற்கின்றேன்.

Thursday, 10 December 2015

வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?

ஈழத்திலும் மழை தான்
பொருண்மிய அழிவோடு போயிற்று!
ஆனால்
இந்தியத் தமிழகத்தில்
பொருண்மிய அழிவோடு மக்கள் உயிர்களையும்
இழக்க வேண்டியதாயிற்று!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
பழைய கதை - ஆனால்
நின்ற மக்கள் வெள்ளத்தை
வந்த மழை வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
(கடற்கோள்-சுனாமி போல)
2015 கார்த்திகை - மார்கழி கால
கடலூரில் தொட்டு சென்னை வரையான
தமிழக மக்களின் கதை!

எனது "கடவுளே! கண் திறந்து பாராயோ! http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html" என்ற பதிவை எழுதிய பின் தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் முகம் கொடுக்கவுள்ள சிக்கல்களுக்கான ஆற்றுப்படுத்தலைப் பகிர எண்ணினேன். இவ்வெண்ணமே இப்பதிவை எழுதத் தூண்டிற்று. வெள்ளம் வடிய நோய்கள் பெருக வாய்ப்பு உண்டென்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பற்றிய அறிஞர்களின் வழிகாட்டலைப் பொறுக்கி உங்களுடன் பகிருவதோடு எனது எண்ணங்களையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

"சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பேதி ஆகியவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் மருத்துவமனைகளில் தோல் நோய், ஒவ்வாமை, வைரல் தொற்றுக் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு நோய்க்கூறுகளுடன் நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை எக்காரணம் கொண்டும் காய்ச்சாமல் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்." என்ற செய்தியை "http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-வெள்ள-பாதிப்பு-அதிகரித்து-வரும்-பேதி-காய்ச்சல்-சரும-நோய்கள்/article7961579.ece" என்ற தளத்தில் படிக்க முடிந்தது. இந்நிலை கடலூர் மாவட்டத்திலும் இருக்கு என்பதை எவரும் மறந்து விடுவதற்கில்லை.

நான், எனது கருத்தாக "துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளின் பிள்ளைகளாக வணங்குகின்றேன்." என்று தெரிவித்தாலும் "கடவுளைக் கண்டீர்களா? வாருங்கள் கடலூரிலும் சென்னையிலும் காணலாம்." என்று துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளாகவே பல அறிஞர்கள் காண்பிக்கின்றனர். ஆயினும், வெள்ளம் வடிய நோய்கள் பெருகும் வேளை மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பலர் பணம் வேண்டாமல் (இலவசமாக) மருத்துவ உதவிகள் வழங்க முன்வந்தமையைப் பாராட்டுகின்றேன்.

"சென்னை அப்பல்லோ மருத்துவமனை, மருந்துகளை இலவசமாகவும், டோர்டெலிவரி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 18605000101 என்ற எண்ணில் அழைத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஏராளமான மருத்துவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் கொடுத்து இலவச மருத்துவ சேவை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்." என்றும் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மருத்துவர்களின் விபரத்தைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம். ஆயினும், கடலூர் மாவட்டத்திற்கு இவ்வாறு உதவுவோர் விரிப்பைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உறவுகளே! நோய் வருமுன் முற்காப்பு எடுப்பதும் நோய் வந்த பின் சுகப்படுத்தப் பாதுகாப்பு எடுப்பதும் நம்மவர் கடமை. அந்த வகையில் பெருவெள்ளம் பல கழிவுகளைக் கலக்கிக் கலந்து பரப்பும். அதனால், பல தொற்று நோய்கள் பரவ வாய்ப்புண்டு. அதிலும் எலிக் கழிவு நீர், ஏனைய கழிவு கலந்த பெருவெள்ளப் பெருக்கினால் எலிக் காய்ச்சல் தோன்றலாம். அது பற்றிய தகவலை எங்கள் விருப்புக்குரிய சிறந்த பதிவர்களான THILLAIAKATHU CHRONICLES தள அறிஞர்கள் வெளியிட்ட பதிவை மறக்காமல் படியுங்கள். "இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே." எனக் கூறும் அவர்களது பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எலிக் காய்ச்சல் பற்றிய மேலதிகத் தகவலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.

"காய்ச்சல், தொற்று நோயைத் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) வினியோகம் செய்யப்பட்டது." என http://ns7.tv/ta/fever-infections-hospitals-prevent-government-distributed-chiretta-kacayam.html என்ற தளத்தில் கண்ணுற்றேன். ஆயினும் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) பற்றிய தெளிவான பதிவை "நிலவேம்பு - மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பில் அறிஞர் முத்துநிலவன் ஐயா பகிர்ந்துள்ளார். "மழை விட்டாலும் தூவானம் விடாது. அதுபோலவே வெள்ளம் வடிந்தாலும், நோய்கள் விடாது! எச்சரிக்கை அவசியம்..." எனத் தொடரும் அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மழை, வெள்ளப்பெருக்குக் காலங்களில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விரிப்பினை அறிஞர் ஒருவர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
இன்னொரு அறிஞர் Google Plus பக்கத்தில் படமொன்றின் மூலம் சிறந்த வழிகாட்டலைப் பகிர்ந்துள்ளார்.

2004 கடற்கோள் (சுனாமி) காலத்தில் உடல் நலம், உளநலம் பேணும் நோக்கில் ஆற்றுப்படுத்துதல் மேற்கொண்டமை நினைவிருக்கலாம். அதே ஆற்றுப்படுத்துதல் இப்போதும் தேவை தானே! "வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?" என்றால் வேண்டும் என்றே என் பதில் அமையும். அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிப் பேசுவதாயின் உள (மன) நோய்கள் அற்ற மனித வளத்தை ஆக்கத் தேவையான ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

பொருண்மிய இழப்பென்றால் எவராவது உதவி செய்து சரிப்படுத்தலாம். மனித உயிரிழப்பு என்றால் எப்படி ஈடு செய்வது? அதேபோல விருப்புக்குரிய உடைமைகளை இழந்தாலும் கூட, எங்காவது தேடிப் பிடித்து வேண்டிக்கொள்ளலாம். ஆனால், விருப்புக்குரிய மனித உறவுகளை இழந்தால் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? இக்கேள்விகளுக்குப் பதில் தரமுடியாதுள்ள வேளை, இவ்வாறு பாதிப்புற்ற உள்ளங்கள் எத்தனை துயரைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனை துயரையும் தாங்கிக்கொள்ள முடியாத வேளை, அவர்களது உள்ளம் உடைந்து போகலாம். எனவே அவரவர் உள்ளம் உடைந்து போகாமல் அதாவது உள்ளம் நொந்துவிடாமல், சிறப்பாகக் கூறின் உள்ளப் புண் ஏற்பட்டுவிடாமல் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.


உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் அறிஞர்கள் அல்லது உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் நிறுவனங்கள் பொருண்மிய இழப்போடு உயிரிழப்பையும் சந்தித்த கடலூரில் தொட்டு சென்னை வரையான தமிழக மக்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். பொருண்மிய உதவிகளும் மருத்துவ உதவிகளும் எவ்வளவுக்கு முதன்மை பெறுகின்றதோ, அதற்கு நிகராக ஆற்றுப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆற்றுப்படுத்துதல் மூலம் உளநலம் பேணுவதோடு உள (மன) நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ குறைகவோ முடியும். எனவே, உள (மன) நோய்கள் அற்ற மக்களாயம் (சமூகம் - Society) உருவாக நாம் எல்லோரும் பொருண்மிய உதவி, மருத்துவ வழிகாட்டல் வழங்குவதோடு நின்றுவிடாமல் துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் மூலம் இயல்பு வாழ்க்கையைத் தொடர உதவவேண்டும்.

Sunday, 6 December 2015

கடவுளே! கண் திறந்து பாராயோ!


மழை வந்து நனைத்துச் செல்ல
வானம் அழுது மழை விழுது என
பள்ளியில் படித்ததை நினைப்போமே!
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் ஆங்கே சேருமாம்
என்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!
சென்னைக்குக் கொட்டிய மழைநீர்
கடலுக்கும் ஆங்கே சேராமால்
தடுப்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!

ஊருக்குள்ளே மழையைக் கொட்டி
முட்டியோடும் வெள்ளம் கண்டு
ஊராளுகள் - அவ்வெள்ளத்தை
கடலுக்குள்ளே ஓட்டிவிடக் கற்றிட
அரையடி வெள்ளம் போதாதா கடவுளே!
"வெள்ளம் வருமுன் அணை போடு" என்றோ
"வேளாண்மைக்கு மிஞ்சிய வெள்ளம் கண்டு
ஓட்ட வேண்டும் கடலில் விழுந்தோட..." என்றோ
கடவுளே! - நீ... நீ... நீ...
சொல்லிக் கொடுக்க விரும்பி இருந்தால்
இழப்புகள் ஏதுமின்றியே உணர்த்தி இருக்கலாமே!

கடலூரில் தொட்டு சென்னை வரை
இடுப்புக்கு மேலே தலைக்கு மேலே
மழையைக் கொட்டி வெள்ளம் பெருக்கி
ஆங்காங்கே ஊர்கள் வெள்ளத்தில் மூழ்க
கடவுளே! - நீ... நீ... நீ...
வந்திங்கே வாழ்ந்து பார்த்தால் காண்பீர்
தமிழர் வாழ்வையே அழிக்கும் வெள்ளத்தையே!
ஈழவரின் தொப்புள்கொடி உறவுகளாம்
தமிழக மக்களின் வாழ்வைச் சீரழித்து
வேடிக்கை பார்க்கும் கடவுளே! - உன்
திருவிளையாடலுக்கு எல்லையே இல்லையா?

தமிழக மக்களின் வாழ்வைக் கொஞ்சம்
கடவுளே! கண் திறந்து பாராயோ! - நீ
படைத்த உயிர்களின் வாழ்வை மீட்டிட - உன்
திருவிளையாடலைத் தான் நிறுத்தாயோ!
இல்லையேல் - கடவுளே!
உன்னை நினைக்க எவரிருப்பார் இங்கே!
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

குறிப்பு: 2015 கார்த்திகை - மார்கழி காலத்தில் கொட்டிய அடைமழையால் துயருறும் தமிழக உறவுகளை எண்ணிப் புனைந்த பதிவிது. தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஈழத் தமிழருடன் உங்கள் யாழ்பாவாணனும் கடவுளை வேண்டி நிற்கின்றார்.


மார்கழி முதலாம் நாள்

உலக உயிர் கொல்லி நோய் (AIDS) நாளாக
மார்கழி முதலாம் நாளைச் சொல்லிச் சுட்டுறாங்க
"தவறான உறவை வெட்ட..."

தவறான உறவால் ஒட்டிக் கொள்ளும் நோயை
மறவாமல் வெட்டிக் கொள்ள உதவாத உறவு
"ஆகாத உறவின் ஆக்கம்!"

ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறினால்
ஒருவருக்கு ஒருவரால் தொற்றும் ஒரு தொல்லையே
"AIDS - உயிர் கொல்லி நோய்!"Thursday, 3 December 2015

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி?

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால், அதனை நீண்ட ஆயுளுடன் பேண முடியுமே! மின்னை மட்டுப்படுத்தி வழங்கும் பகுதியை (Charger) வெப்பமடையாமல் பேணுங்கள். மின்கலம் சேமிப்பு நிலை (Battery Charge Level) 100 இற்கு மேலோ 25 இற்குக் கீழோ போகாது பேணினால் மின்கலத்தை நீண்ட ஆயுளுடன் பேணலாம்.

மேற்காணும் பேணுகை ஒழுங்கமைப்பை முறையாகப் பேணுவது நன்மைக்கே! இதற்கு உதவியாகச் சாளரம் மின்நிலைத் தெரிவையோ (Windows Power Options) மின்கல நிலைக் கணிப்பான் (Battery Meter) செயலியையோ (Gadget) நீங்கள் பாவிக்கலாம். ஆயினும், நான் இப்போது எனது 'மடிக்கணினி மின்கல நிலை மற்றும் நினைவூட்டல் (Laptop Battery Status and Reminder)' என்ற செயலியைத் தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.

கீழுள்ள மாதிரியைப் பாருங்கள்! இங்கு நினைவூட்டல் ஒலி (Alarm) இற்கு பதிலாகத் தகவலைக் காட்டும்.இச்செயலியை உங்கள் தளத்தில் பயன்படுத்தக் கீழ்வரும் நிரலைப் (Code) பாவிக்கலாம்.

<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="lbsr" src="http://www.yarlsoft.com/ads/App_Wdgts/yslbsr2015.htm" width="350"> Your browser does not support Iframes. </iframe><br />
எனது கணனி முகப்புச் (Desktop) செயலியில் (Application) நினைவூட்டல் ஒலி (Alarm) மற்றும் வசதிகள் அதிகம் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது செயலியைப் பதிவிறக்கலாம். இது சாளரம் (Windows) இயங்கு தளத்தில் இயங்கும். ஆயினும் டொட் நெற் தொழில் நுட்பம் 4 அல்லது பிந்திய பதிப்பு நிறுவியிருக்க (Install) வேண்டும்.

எனது செயலியைப் (Application) பதிவிறக்கிப் பயன்படுத்திய பின், அதன் நன்மை, தீமைகளை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். எனது செயலியைப் (Application) பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.