Translate Tamil to any languages.

Thursday, 10 December 2015

வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?

ஈழத்திலும் மழை தான்
பொருண்மிய அழிவோடு போயிற்று!
ஆனால்
இந்தியத் தமிழகத்தில்
பொருண்மிய அழிவோடு மக்கள் உயிர்களையும்
இழக்க வேண்டியதாயிற்று!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
பழைய கதை - ஆனால்
நின்ற மக்கள் வெள்ளத்தை
வந்த மழை வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
(கடற்கோள்-சுனாமி போல)
2015 கார்த்திகை - மார்கழி கால
கடலூரில் தொட்டு சென்னை வரையான
தமிழக மக்களின் கதை!

எனது "கடவுளே! கண் திறந்து பாராயோ! http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html" என்ற பதிவை எழுதிய பின் தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் முகம் கொடுக்கவுள்ள சிக்கல்களுக்கான ஆற்றுப்படுத்தலைப் பகிர எண்ணினேன். இவ்வெண்ணமே இப்பதிவை எழுதத் தூண்டிற்று. வெள்ளம் வடிய நோய்கள் பெருக வாய்ப்பு உண்டென்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பற்றிய அறிஞர்களின் வழிகாட்டலைப் பொறுக்கி உங்களுடன் பகிருவதோடு எனது எண்ணங்களையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

"சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பேதி ஆகியவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் மருத்துவமனைகளில் தோல் நோய், ஒவ்வாமை, வைரல் தொற்றுக் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு நோய்க்கூறுகளுடன் நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை எக்காரணம் கொண்டும் காய்ச்சாமல் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்." என்ற செய்தியை "http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-வெள்ள-பாதிப்பு-அதிகரித்து-வரும்-பேதி-காய்ச்சல்-சரும-நோய்கள்/article7961579.ece" என்ற தளத்தில் படிக்க முடிந்தது. இந்நிலை கடலூர் மாவட்டத்திலும் இருக்கு என்பதை எவரும் மறந்து விடுவதற்கில்லை.

நான், எனது கருத்தாக "துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளின் பிள்ளைகளாக வணங்குகின்றேன்." என்று தெரிவித்தாலும் "கடவுளைக் கண்டீர்களா? வாருங்கள் கடலூரிலும் சென்னையிலும் காணலாம்." என்று துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளாகவே பல அறிஞர்கள் காண்பிக்கின்றனர். ஆயினும், வெள்ளம் வடிய நோய்கள் பெருகும் வேளை மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பலர் பணம் வேண்டாமல் (இலவசமாக) மருத்துவ உதவிகள் வழங்க முன்வந்தமையைப் பாராட்டுகின்றேன்.

"சென்னை அப்பல்லோ மருத்துவமனை, மருந்துகளை இலவசமாகவும், டோர்டெலிவரி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 18605000101 என்ற எண்ணில் அழைத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஏராளமான மருத்துவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் கொடுத்து இலவச மருத்துவ சேவை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்." என்றும் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மருத்துவர்களின் விபரத்தைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம். ஆயினும், கடலூர் மாவட்டத்திற்கு இவ்வாறு உதவுவோர் விரிப்பைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உறவுகளே! நோய் வருமுன் முற்காப்பு எடுப்பதும் நோய் வந்த பின் சுகப்படுத்தப் பாதுகாப்பு எடுப்பதும் நம்மவர் கடமை. அந்த வகையில் பெருவெள்ளம் பல கழிவுகளைக் கலக்கிக் கலந்து பரப்பும். அதனால், பல தொற்று நோய்கள் பரவ வாய்ப்புண்டு. அதிலும் எலிக் கழிவு நீர், ஏனைய கழிவு கலந்த பெருவெள்ளப் பெருக்கினால் எலிக் காய்ச்சல் தோன்றலாம். அது பற்றிய தகவலை எங்கள் விருப்புக்குரிய சிறந்த பதிவர்களான THILLAIAKATHU CHRONICLES தள அறிஞர்கள் வெளியிட்ட பதிவை மறக்காமல் படியுங்கள். "இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே." எனக் கூறும் அவர்களது பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எலிக் காய்ச்சல் பற்றிய மேலதிகத் தகவலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.

"காய்ச்சல், தொற்று நோயைத் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) வினியோகம் செய்யப்பட்டது." என http://ns7.tv/ta/fever-infections-hospitals-prevent-government-distributed-chiretta-kacayam.html என்ற தளத்தில் கண்ணுற்றேன். ஆயினும் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) பற்றிய தெளிவான பதிவை "நிலவேம்பு - மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பில் அறிஞர் முத்துநிலவன் ஐயா பகிர்ந்துள்ளார். "மழை விட்டாலும் தூவானம் விடாது. அதுபோலவே வெள்ளம் வடிந்தாலும், நோய்கள் விடாது! எச்சரிக்கை அவசியம்..." எனத் தொடரும் அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மழை, வெள்ளப்பெருக்குக் காலங்களில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விரிப்பினை அறிஞர் ஒருவர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
இன்னொரு அறிஞர் Google Plus பக்கத்தில் படமொன்றின் மூலம் சிறந்த வழிகாட்டலைப் பகிர்ந்துள்ளார்.

2004 கடற்கோள் (சுனாமி) காலத்தில் உடல் நலம், உளநலம் பேணும் நோக்கில் ஆற்றுப்படுத்துதல் மேற்கொண்டமை நினைவிருக்கலாம். அதே ஆற்றுப்படுத்துதல் இப்போதும் தேவை தானே! "வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?" என்றால் வேண்டும் என்றே என் பதில் அமையும். அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிப் பேசுவதாயின் உள (மன) நோய்கள் அற்ற மனித வளத்தை ஆக்கத் தேவையான ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

பொருண்மிய இழப்பென்றால் எவராவது உதவி செய்து சரிப்படுத்தலாம். மனித உயிரிழப்பு என்றால் எப்படி ஈடு செய்வது? அதேபோல விருப்புக்குரிய உடைமைகளை இழந்தாலும் கூட, எங்காவது தேடிப் பிடித்து வேண்டிக்கொள்ளலாம். ஆனால், விருப்புக்குரிய மனித உறவுகளை இழந்தால் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? இக்கேள்விகளுக்குப் பதில் தரமுடியாதுள்ள வேளை, இவ்வாறு பாதிப்புற்ற உள்ளங்கள் எத்தனை துயரைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனை துயரையும் தாங்கிக்கொள்ள முடியாத வேளை, அவர்களது உள்ளம் உடைந்து போகலாம். எனவே அவரவர் உள்ளம் உடைந்து போகாமல் அதாவது உள்ளம் நொந்துவிடாமல், சிறப்பாகக் கூறின் உள்ளப் புண் ஏற்பட்டுவிடாமல் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.


உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் அறிஞர்கள் அல்லது உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் நிறுவனங்கள் பொருண்மிய இழப்போடு உயிரிழப்பையும் சந்தித்த கடலூரில் தொட்டு சென்னை வரையான தமிழக மக்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். பொருண்மிய உதவிகளும் மருத்துவ உதவிகளும் எவ்வளவுக்கு முதன்மை பெறுகின்றதோ, அதற்கு நிகராக ஆற்றுப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆற்றுப்படுத்துதல் மூலம் உளநலம் பேணுவதோடு உள (மன) நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ குறைகவோ முடியும். எனவே, உள (மன) நோய்கள் அற்ற மக்களாயம் (சமூகம் - Society) உருவாக நாம் எல்லோரும் பொருண்மிய உதவி, மருத்துவ வழிகாட்டல் வழங்குவதோடு நின்றுவிடாமல் துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் மூலம் இயல்பு வாழ்க்கையைத் தொடர உதவவேண்டும்.

18 comments :

 1. வணக்கம் நண்பரே விரிவான விளக்கத்துடன் அனைத்தும் பயனுள்ள விடயங்கள் தங்களின் செயலுக்கு நன்றிகள் கோடி.

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 2. Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 3. மிக மிக அருமையான நல்ல பதிவு நண்பரே! தகவலுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 4. மனித வடிவிலான தெய்வங்கள் பலரை அடையாளம் காட்டவும் உதவிற்று இந்த மாமழை!

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 5. சென்னை, இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் நாளை எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 6. வணக்கம்
  யாவருக்கும் பயனுள்ளதகவல் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 7. அனைத்தும் அருமை நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 8. தகவலுக்கு நன்றி! நண்பரே.......

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete
 9. அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவைப் பலருடன் பகிர்ந்து; துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் பணி செய்ய உதவுவோம்.

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!