Translate Tamil to any languages.

Friday, 29 July 2016

படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?

அறிஞர் வே.இறையன்பு எழுதிய "படிப்பது சுகமே! (முதல் பதிப்பு – டிசம்பர் 2004, பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்)" என்ற நூலை வேண்டிப் படித்தால், எல்லாப் பிள்ளைகளும் படிக்கும் தானே! இவனேன் யாழ்பாவாணன் படிப்பைப் பற்றி இடித்துரைக்க வாறான்... எனத் தொடர்ந்து படிக்காமல் நிறுத்திவிடாதீர்கள். இது யாழ்பாவாணனின் கைவண்ணமெனப் படித்துச் சுவைத்துப் பாருங்களேன்.

இருவர் பேச்சை எடை போடுங்க பார்ப்போம்...
ஒருவர்: தேர்வெழுத அஞ்சிப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்தியளே, இப்ப என்னாச்சு?
அடுத்தவர்: நாலு காசு வருவாய் ஈட்ட, நாளுக்கு நாள் தேர்வெழுத வேண்டியிருக்கே!

இப்படியான ஒரு சூழலில் தான் "காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?" என்று கேட்பார்கள்! குறித்த காலத்திலேயே (பருவத்திலேயே) பயிர் செய்ய வேண்டும். அதாவது, மழைக் காலத்தில் பயிர்களை நட்டால் தானாகவே வளரும். அதுபோலத் தான், இளமையிலே கல்வி கற்றால் இலகுவாகத் திறமை பெற வாய்ப்பிருக்கே! ஆயினும், முழுமையான விருப்பத்துடன் கல்வி கற்பவருக்குத் தான் இந்த வாய்ப்புக் கிட்டும்!

இளமையிலே கல்வி கற்றிருந்தால்
நாலு காசு வருவாய் ஈட்ட
நாளுக்கு நாள்
தேர்வெழுத வேண்டியிருக்காதே!
அப்படியாயின்
படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?
என்றெல்லாம்
எவரும் கேட்கலாம் தானே! - அந்த
படிப்பில எத்தனை அறிவு இருக்கு?

அறிவு ஐந்து வகை தான் - அவை
கண்ணால் காண்பது பார்த்து அறிதல்
காதால் கேட்பது கேட்டு அறிதல்
மூக்கால் மணப்பது மணந்து அறிதல்
நாக்கால் சுவைப்பது சுவைத்து அறிதல்
தோலால் உணருவது உணர்ந்து அறிதல்
என்றவாறே கற்றறிவதேயாம்!
இவ்வைந்தறிவை விஞ்சி நிற்பது
ஆறாம் அறிவாம் - அது
நல்லது எது? கெட்டது எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
ஏழாம் அறிவு என்று
ஏதோ ஒன்று இருப்பதாய் அறிந்தால் - அது
நல்வழி எது? கெட்டவழி எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
அடடே! அதற்கப்பால்
எட்டாம் அறிவு ஒன்றிருக்காம் - அது
கெட்டது, கெட்டவழி எதுவென்றறிந்து
அவற்றை விட்டொதுங்கி
நல்லது, நல்வழி எதுவென்றறிந்து
நடை போடக் கற்றறிவதேயாம்!

இப்படித்தான் அடிப்படைக் கல்வியை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மாணவருக்கும் முதலாவது ஆசிரியர், அம்மா தான்; இரண்டாவது அப்பா தான்! எனவே, பெற்றோர்கள் தான் இந்த அடிப்படைக் கல்வியை ஊட்ட வேண்டும்.

சுவையறிந்து உண் - உண்டு சுவைத்து உணர்ந்தைச் சொல்லி உணவூட்டுவது போல, நாம் கற்றுச் சுவைத்த உணர்வைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
செயலறிந்து செய் - சில செயல்களைச் செய்ததன் விளைவாகப் பட்டறிந்ததைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
படம் பார் பாடம் படி - படங்களை அல்லது காட்சிகளைக் காண்பித்துக் குறித்த ஒன்றைச் சுட்டி அடையாளப்படுத்தியும் அறிவூட்டலாம்.
இப்படித்தான் மாணவர் உள்ளத்தைப் புண்ணாக்காமல், மாணவர் உள்ளத்தில் விருப்பங்களை விதைத்துக் கற்றலை ஊக்கப்படுத்தலாம்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
     இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
     ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
     பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..."

இப்படியொரு பாரதியாரின் பாடல் உண்டு. அதாவது, எத்தனையோ கோடி நன்மைகள் பிறருக்குச் செய்தாலும் ஓர் ஏழைக்கு எழுதறிவித்தலே (கற்பித்தலே) சிறந்தது எனப் பாரதியார் வழிகாட்டுகின்றார். இதனை ஆசிரியர்கள் கருத்திற்கொண்டு நிறைவான பணியை மாணவர்களுக்கு வழங்கலாம். அந்த நிறைவான பணி, மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்துமே!

நாளும் எழுத, வாசிக்க, பேச
படம் வரைய, கணக்குப் பார்க்க
ஆடிப் பாடி நடிக்க, விளையாட
பழகிப் பழகிப் படிக்க முடியுமே!

விரும்பிய படத்தைப் பார்த்து வரையலாம்
விரும்பிய ஆளைப் பார்த்து வரையலாம்
விரும்பிப் படித்ததை எழுதிப் பார்க்கலாம்
விரும்பிக் கேட்டதை எழுதித் தொகுக்கலாம்
எழுதிய எதையும் வாசித்துப் பார்க்கலாம்
எழுதி வைத்தே பேசிக் காட்டலாம்
எழுதி வைத்தே பாடிக் காட்டலாம்
பாட்டுக்கு ஏற்ப ஆடிக் காண்பிக்கலாம்
கதைக்கு ஏற்ப நடித்துக் காண்பிக்கலாம்
விரும்பிய விளையாட்டும் விளையாடலாம்
விளையாட்டின் முடிவுகளைக் கணித்துச் சொல்லவும்
கொடுக்கல், வாங்கல் விரைவாக அமையவும்
கணக்குப் பார்க்கவும் அறிந்திருக்க வேண்டுமே!
உண்மையில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென
வழிகாட்டிய பெரியோர் விருப்புக்கு அமைய
நாமும் கற்றுப் பெரியவர் ஆகலாமே!

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்." என்றவாறு ஔவையார் பாடலும் விளக்கமும் https://ta.wikisource.org/s/4m என்ற பக்கத்தில் (ஏழாவது வெண்பா) காணப்படுகிறது.

அதாவது, மீள மீளச் சொல்வதாலோ செய்வதாலோ பழக்கமாகிவிடும் என ஔவையார் வழிகாட்டுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆமாம்! ஒரு பொழுது எண்ணிப் பார்ப்பதை விட, பல பொழுது எண்ணிப் பார்ப்பதால் நமது உள்ளத்தில் குறித்த செய்தி ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும், உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த செய்தி தானியங்கி (Automatic) முறையில் தக்க சூழலில் வெளிவரும். எனவே, ஔவையாரின் வழிகாட்டலைப் பின்பற்றினால் கூடப் படிப்பது இலகுவானதே!

தேர்வு என்பது அதிகமாகத் திரட்டிய தகவல் வைப்பகத்தில் விரைவாகத் தேடி எடுக்கின்ற பதில்களை வைத்துத் திறமையானவர்களை அடையாளம் காண்பதேயாகும். அப்படியாயின், அதிகமான தகவலைத் திரட்டிய மாணவரே முதன்மை நிலை அடைகின்றார். அதன்படிக்கு நாம் எத்தனை வழிகளில் தகவலைச் சேகரிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நாம் எத்தனை தகவலைச் சேகரித்துப் பேணுகிறோம் என்பது தான் முக்கியம். இப்படிப் படிப்பதனாலேயே படிப்பது இலகுவானதாக அமைகின்றது.

3 comments :

  1. பயனுள்ள விடயங்கள் பொதிந்த பதிவு தந்த நண்பருக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் நண்பரே!

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!