Translate Tamil to any languages.

நற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்

கடற்கோள் காவுகொண்ட குமரிக்கண்டம்

உலகிலேயே முதலில் மக்கள் வாழ்ந்த இடமாக குமரிமுனைக்குத் தெற்கே நில நடுக்கேட்டிற்கு இருபகுதியும் இருந்த நிலப்பரப்பான குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் லெமூரியாக்கண்டம் கருதப்படுகிறது. அங்கு தமிழ் மொழி தான் பேச்சு மொழியாக இருந்ததாம். உலக மொழிகள் எல்லாவற்றிலுமே மிகவும் பழமையான மொழி தமிழ்தான் என்பதால் இதனை நம்பலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோள்(சுனாமி) ஒன்று ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கடலால் மூழ்கடிகக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே ஒரே நிலப்பரப்பான இந்தியாவும் ஈழமும் பாக்கு நீரிணையால் இரண்டாகத் துண்டானதாகவும் பல அறிஞர்கள் எழுதிய நூல்களில் காணமுடிகிறது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு        தென்றிசையாண்ட தென்னவன் வாழி
(சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை : 17-22)

என்று சிலப்பதிகாரத்தில் விவரிப்பதும் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து" எனத் தொல்காப்பியத்தில் விவரிப்பதும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வேங்கடத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு தெற்கே கடல் எல்லைவரை விரிந்து பரந்த பெருநிலப்பரப்பில் தமிழ் மட்டுமே புழக்கத்தில் இருந்ததையே! இதிலிருந்து உலகில் மூத்த குடியினர் தமிழர் என்றும் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புக்குக் காரணமான குமரிக்கண்டத்தைப் பற்றி சற்றுக் கவனிப்போம்.

தமிழரின் தாய் நாடு எது தெரியுமா? சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், "தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா?" என்று ஐயம் தெரிவிக்கலாம்.

இலங்கை அல்லது ஈழம், இந்தியா ஆகிய இரண்டும் ஒரே நிலப்பரப்பாக இருந்து கடற்கோள் வந்து பிரித்ததாக வரலாற்று நால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் இரு நாடுகளும் இணைந்த நிலப்பரப்பை என்ன பெயரில் அழைத்திருப்பார்கள்? உண்மையில் குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று தான் பதிலளிக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் கடற்கோள் காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுவதால் குமரிக்கண்ட காலத்திலேயே இது நிகழ்ந்திருக்கும்.

குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று www.google.com தேடுபொறியில் தேடினால் பதிலுக்கான வரலாறு கிடைக்கும். தமிழரின் இப்பெருநிலப்பரப்பின் எல்லைகளாக ஆபிரிக்காவிலிருந்து  அவுஸ்ரேலியா வரையான இந்து மா கடலை அண்டிய நிலப்பரப்பென "குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு" என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறுகின்றார்.

அவரது நூலில் "இலெமூரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன் (Permian), மயோஸின் (Miocene) காலங்களில் ஆபிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பலயோஸியிக் (Palaeozoie) காலங்களில் அவுஸ்ரேலியா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் கருதப்படுகிறது" எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், ஆபிரிக்கா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே மேற்கிந்தியத் தீவுகள் என்றும் அவுஸ்ரேலியா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் அப்பாத்துரையாரின் நாலிலிருந்து அறிய முடிகிறது. அவரது நூலில்  தரப்பட்ட உலக வரைபடத்தை இங்கே இணைத்துள்ளேன்.


குமரிக்கண்டம் வாழ் மக்கள் திராவிடர் என்றும் அவர்கள் பேசியது திராவிட மொழி என்றும் வரலாறுகள் கூறி நிற்கின்றன. யார் அந்தத் திராவிடர்? தமிழரென வாழும் நாங்களே! திராவிட மொழி என்றால் எது? நாங்கள் பேசும் தமிழ் மொழியே!

உலகின் அரைப்பங்கையே தம்பக்கம் கொண்டிருந்த குமரிக்கண்டம் வாழ் தமிழ் மக்கள் தற்போது எங்கே? 65 அல்லது 60 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் தமிழ் பேசுவதாகவும் 15ஆம் அல்லது 17ஆம் இடத்தில் தமிழ் மொழி இருப்பதாகவும் கூறுகின்றார்களே, எஞ்சியோர் எந்த மொழிக்காரர் ஆயிட்டினம்?

எஞ்சியோரைக் கடற்கோள் (Tsunami) விழுங்கியதாகக் கூறமுடியாது. மும்முறை கடற்கோள் (Tsunami) ஏற்பட்டும் தமிழராட்சி நிகழ்திருக்கிறது. கடற்கோள் (Tsunami) விழுங்காத இடம் பார்த்து மக்களும் அரசரும் வாழ்ந்தமையாலேயே, பாண்டிய மன்னன் பேணிய கடைத்(மூன்றாம்) தமிழ் சங்கம் மதுரையில் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுமே!

ஆண்ட தமிழன் ஆளா விட்டாலும் தமிழைச் சாகவிடாமல் பேணுவதோடு தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை உலக மொழிகள் எல்லாவற்றிலும் அறிஞர்களே வெளியிட்டு உதவுங்கள். நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது போல தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை மொழிபெயர்த்துக் காட்டுங்கள் அறிஞர்களே ! நீங்கள் செய்யும் இப்பணி, உலகமே தமிழுக்கு மாறச் செய்ய உதவுமே!

குமரிக்கண்டம் கடற்கோளால் சிதைந்தமை, நாடுகள் உடைந்தமை, நாடுகளில் ஏற்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் போர் காரணமாக மக்கள் வெளியேற்றம் எல்லாமே தமிழர் உலகெங்கும் பரவக் காரணமாயின.

அதனால், அவர்கள் அவ்வவ் நாட்டு மொழிகளை அடையாளப் படுத்தியதால் தமிழருக்கான அடையாளத்தை இழந்துள்ளனர். அன்று தொட்டு இன்று வரை உருளும் உலகில் தமிழர் எண்ணிக்கை  சுருங்கி வருகின்றது. மொழி தான் இனத்தின் அடையாளம். மொழியை மறந்தால் இன அடையாளம் இன்றியே வாழவேண்டி வரும்.

எனவே, உலகெங்கும் வாழும் தமிழர்களே... தமிழை வாழ்வில் வழக்கப்படுத்துவோம். எமது வழித் தோன்றல்களுக்கு தமிழறிவை ஊட்டி, தமிழர் வரலாற்றை எடுத்துச் சொல்லி, வேலை செய்யும் வேளையில் பணியக (பிற) மொழியையும் எஞ்சிய பதினாறு மணி நேரம் தமிழோடு வாழ்ந்து, தமிழையே பேசி, படைப்புகளைத் தமிழிலிலேயே வெளிப்படுத்தி நாம் தமிழரென நாமே அடையாளப்படுத்த ஒன்றிணைவோம் வாருங்கள்.

இன்று இணைய வழி வெளியீடுகளில் (நீங்களும் இலவசமாக எத்தனையோ பதிவுத் தளங்களைப் பெறலாம்) உங்கள் தமிழ்ப் படைப்புகளை வெளியிடுங்கள். அதனைப் பார்ப்போர், தமிழை விரும்பக்கூடிய வகையில் உங்கள் படைப்புகள் அமையட்டும். தமிழைக் காதலிப்போர் பெருகினால், சுருங்கிய தமிழர் உருளும் உலகில் பெருகுமே!

மீண்டும் ஒரு தமிழுலகை உருவாக்குவோம் வாருங்கள். இதற்கு உதவியாகத் தமிழ்ப் படைப்புகளை ஆக்குவதற்கான உதவிக் குறிப்புகளை இவ்விணையப் பக்கத்தில் பதிவு செய்யவுள்ளேன்.

உருளும் உலகில் சுருங்கும் தமிழர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள மாற்றுவழி ஏதுமிருப்பின் எனக்கும் சொல்லித் தாருங்களேன்!

6 comments :

 1. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்: 10:28 பிப இல் ஜனவரி 22, 2012

  பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. 7:26 பிப இல் ஜனவரி 28, 2012
   தங்கள் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 2. Naanjil (@naanjilnaseer) சொல்கிறார்: 1:02 பிப இல் மே 15, 2013

  இந்த கட்டுரையை படித்தபோது “குமரிதமிழன்” என்று சொல்வதில் பெருமையாக இருக்கிறது..!

  ReplyDelete
  Replies
  1. 1:21 பிப இல் மே 15, 2013
   உண்மையில் தமிழன் என்றாலே பெருமைக்குரியவன். அதுவும் “குமரிதமிழன்” என்றால் இன்னும் பெருமை தான்.

   Delete
 3. Govind Dhanda சொல்கிறார்: 2:32 பிப இல் ஓகஸ்ட் 25, 2013

  வரலாற்றுப் பதிவு அருமை அன்பரே!

  ReplyDelete
  Replies
  1. 9:03 பிப இல் ஓகஸ்ட் 27, 2013
   தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!